Saturday, 3 November 2018

”கூண்டுக்கிளி” சிபிஐ - ”கழுகாக” மாறுமா.. ? C.B.I = Central Bjp Institution..??

”கூண்டுக்கிளி” சிபிஐ - ”கழுகாக” மாறுமா.. ? 
 - செந்தில் ஆறுமுகம்

பா.ஜ.க. அரசு நள்ளிரவில் சி.பி.ஐ. இயக்குனரை மாற்றிய சர்ச்சையே இன்னும் அடங்கவில்லை; அதற்குள் சிபிஐயின் நன்மதிப்பைக் கெடுக்கும் அடுத்த விவகாரம்..!! இதுவும் உச்சநீதிமன்றத்தில்..!! போறபோக்கைப் பார்த்தால் பா.ஜ.க. ஆட்சி முடிவதற்குள் C.B.I என்றால் Central Bjp Institution என்று விளக்கம் கொடுக்கவேண்டிய அளவுக்கு வந்துவிடும் போலிருக்கிறது..!!
மேட்டர் என்ன..?
இன்று அனைத்துப் பத்திரிகைகளிலும் செய்தி படித்திருப்பீர்கள் “ போபர்ஸ் பீரங்கி ஊழல் வழக்கு: சி.பி.ஐ. மேல்முறையீடு தள்ளுபடி” என்று. அதான் மேட்டர்.
இதில் என்ன இருக்கிறது, ராஜீவ் காந்தி காலக் காங்கிரஸ் ஆட்சியின் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பான ஒரு பழைய வழக்கு விசாரணையின் ஒருகட்டம் அவ்வளவுதானே என்று தோன்றும்.
செய்தியை விரிவாக, முழுமையாக படித்தவர்களுக்குத்தான், எத்தனை நாட்கள் கழித்து சி.பி.ஐ. மேல்முறையீடு செய்தது என்று தெரியும்.
அதிகமெல்லாம் இல்லை 4500 நாட்கள்தான்(13 ஆண்டுகள்) தாமதம். ஆம், “போபர்ஸ்” வழக்கில், 2005, மே 31 அன்று டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த உத்தரவை எதிர்த்து 02-02-2018ல், அதாவது 13 ஆண்டுகள் கழித்து சிபிஐ மேல் முறையீடு செய்கிறது, உச்சநீதிமன்றத்தில். அதுவும் எப்படி ? தாமதமாக(!!??) மேல்முறையீடு செய்வதை மன்னித்து வழக்கை ஏற்றுக்கொள்ளும், கோரிக்கையோடு.
இந்த மேல்முறையீட்டைத்தான், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கோகாய் அமர்வு தள்ளுபடி செய்திருக்கிறது( Court not "convinced" with the reason for "inordinate" delay in filing the appeal by CBI). 90 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்யாமல் விட்டதற்கு சிபிஐ தரப்பு சொல்லும் வாதம் ஏற்றுக்கொள்ளும்படியில் இல்லை என்ற அடிப்படையில் இந்த மேல்முறையீட்டு வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது..!!
2005ல் டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியபோது மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அரசு இவ்வழக்கை சரியாகக் கையாளவில்லை, ஆகவே இப்போது மேல்முறையீடு செய்கிறோம் என்கிறது சி.பி.ஐ. அதுவும், இந்திய தலைமை வழக்கறிஞர்(Attorney General) திரு.வேணுகோபால், இம்மேல்முறையீடு தேவையற்றது, கண்டிப்பாகத் தள்ளுபடி செய்யப்படும் என்று எழுத்துபூர்வமாகக் கொடுத்த எச்சரிகையையும் மீறி சிபிஐ மேல்முறையீடு செய்கிறது..!!
சரி..2014ல் ஆட்சிக்கு வந்த பா.ஜ.க அரசு, ஏன் நான்கு ஆண்டுகள் கழித்து 2018ல் போபர்ஸ் வழக்கில் மேல்முறையீடு செய்கிறது ? 2019 தேர்தல் ஆண்டு என்பதாலும், தேர்தல் சமயத்தில் காங்கிரஸ் தரப்பானது பா.ஜ.க. மீது எழுப்பும் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு(ரபேல் விவகாரம் போல்..) எதிர்வாதம் செய்வதற்கு உதவியாக என்பதற்காகவும் என்று சொல்லித் தெரியவேண்டியதில்லை..
இப்படி யோசித்து பாருங்கள். ஒருவேளை, சிபிஐயின் மேல்முறையீட்டை உச்சநீதிமன்றம் ஏற்றிருந்தால், இன்று செய்தித்தாளில் உள்பக்கத்தில் வந்த செய்தி முதல் பக்கத்தில் “போபர்ஸ் ஊழல், உச்சநீதிமன்ற மேல்முறையீடு ஏற்பு” என்று வந்திருக்கும். ரபேல் ஊழல் விவகாரத்தில் ஊதிக்கொண்டிருக்கும் காங்கிரஸ் அரசின் வயைத் தற்காலிகமாக அடைக்க வாய்ப்பு கிடைத்திருக்கும். ( இந்த மேல்முறையீடு என்பது வழக்கில் தொடர்புடைய இந்துஜா சகோதரர்கள் தொடர்பானதுதான் என்பது வேறுவிஷயம்.. போபர்ஸ் ஊழல் என்று பொதுவாக பா.ஜ.க. முன்வைக்கும்!! )
90நாட்களுக்குள் மேல்முறையீடு செய்திருக்கவேண்டிய வழக்கை 4500 நாட்கள் கழித்து தாக்கல் செய்து, தனது மனு தள்ளுபடி செய்யப்பட்டு அசிங்கப்பட்டு நிற்கிறது சி.பி.ஐ..!! சிபிஐயின் தாமதமான மேல்முறையீட்டிற்கு அன்றைய காங்கிரஸ், இன்றைய பா.ஜ.க.வின் அழுத்தமே காரணமாக இருந்திருக்கும் என்று எளிதில் கணிக்கலாம். ( அதாவது, தீர்ப்பு வெளியான 2005ல் இதற்கு மேல்முறையீடு செய்யவேண்டாம் என்று காங்கிரஸ் அரசு அழுத்தம் கொடுத்திருக்கலாம். அதேபோல், 13 ஆண்டுகள் ஆனால் என்ன.. தேர்தல் வருது மேல்முறையீடு செய்யுங்க என்று சிபிஐக்கு பா.ஜ.க. அழுத்தம் கொடுத்திருக்கலாம்..)
சிபிஐ, ஒரு ”கூண்டுக்கிளி” என்று உச்சநீதிமன்ற நீதிபதி ஆர்.எம்.லோதா முன்னர் குறிப்பிட்டுள்ளார். இன்று நடக்கு விவகாரங்களைப் பார்த்தால், மத்திய அரசு சாவி கொடுத்தால் அசையும் “கிளி பொம்மை” யாகவே சி.பி.ஐ. காட்சியளிக்கிறது.
தீர்வுதான் என்ன..?
Delhi Special Police Establishment Act of 1946 மற்றும் Central Vigilance Commission Act 2003 என்ற இரண்டு சட்டங்கள் தரும் அதிகாரத்தின் மூலம் இயங்கி வருகிறது சி.பி.ஐ. இது மாற்றப்படவேண்டும், சிபிஐக்கு என்று தனிச்சட்டம் வேண்டும் என்ற கோரிக்கை மாறி மாறி ஆட்சி செய்த காங்கிரஸ்-பி.ஜே.பி காதில் விழவில்லை. தனக்கு அடிபணியும் நிலையில் உள்ள சிபிஐக்கு தன்னிச்சட்டம் இயற்றி சொந்த சொலவில் சூன்யம் வைத்துக்கொள்ள காங்கிரசும், பா.ஜ.கவும் விரும்பவில்லை. விரும்பாது.
”கூண்டுக்கிளி” to "கழுகு”:
பாரபட்சமின்றி விசாரணை நடத்த முக்கிய வழக்குகள் சிபிஐக்கு மாற்றப்படவேண்டும் என்று பல்வேறு மாநிலங்களில் இருந்து கோரிக்கை எழுவது வாடிக்கை. அப்படி கோருபவர்களை முட்டாளாக்கிவிடாதீர்கள் !!( 1963ல் சிபிஐ ஆரம்பிக்கப்பட்ட நாள் “ஏப்ரல் 1” !! )
சிபிஐக்கு ஒரு தனியான சட்டம் இயற்றி, அது தன்னாட்சி பெற்றதாக, மத்திய அரசின் அழுத்தத்திற்கு அடிபணியாத அமைப்பாக மாற்றப்படுவதே சி.பி.ஐ.யின் கண்ணியத்தைக் காப்பாற்றும். அப்போதுதான் ”கூண்டுக்கிளி” , உயரப் பறந்து உண்மைகளைக் கண்டறியும் “கழுகாக” மாறும்..

- விமர்சனங்களுக்கு: 8754580274, sentharu@gmail.com

No comments:

Post a Comment