Wednesday, 7 November 2018

சர்கார் : ”லாஜிக் இல்லா மேஜிக்” - “ராமேஸ்வரம் சுந்தர் – ”சூப்பர் மேன் சுந்தராகும் கதை”

சர்கார் : ”லாஜிக் இல்லா மேஜிக்” - “ராமேஸ்வரம் சுந்தர் – ”சூப்பர் மேன் சுந்தராகும் கதை”
ஹாலிவுட் ”ஜீராசிக் பார்க்” தொடங்கி நம்ம ஊர் ”டிக்.டிக்.டிக்” வரையிலான படங்களில், சமகாலத்தில் இல்லாத ஒரு விலங்கைக் காட்டியபோதோ, விண்வெளியில் சென்று நாயகன் சாகசச் சண்டை புரிந்தபோதோ இது நடக்குமா? சாத்தியமா? என்று கேள்வி கேட்டோமா என்பதை நமக்கு நாமே கேட்டுக்கொள்வோம்!!
அதுபோல் சர்கார் இயக்குனரின் “கற்பனையை”, “திரைக்கதையை” ரசிப்போம் என்ற மனநிலையோடு படம் பார்த்தால், தியேட்டர் விட்டு வெளியேறும்போது உங்கள் முன்னர் மைக்கை நீட்டினால் “சூப்பர்” என்ற ஒற்றை வார்த்தை உதிர்த்துவிட்டு செல்வதற்கு வாய்ப்புகள் அதிகம். நான் சொல்வேன் !!
அதாவது, லாஜிக் யோசிப்பதை விட்டுவிட்டு நாயகனின் மேஜிக்கை மட்டும் ரசித்தால், படம் முடியும்போது யாருக்கும் தலைவலிக்காது..!! லாஜிக் நூல்பிடித்து காட்சிக்கு காட்சி அளந்துபார்த்தால், படம் முடிந்த சில மணிநேரங்கள் ( உச்சநீதிமன்றம் அனுமதித்த, அனுமதிக்காத என வேறுபாடின்றி எல்லா நேரத்திலும்!!) தலைக்குள் அணுகுண்டு வெடிக்கும் அபாயம் நிச்சயம் !!
நீட்டி முழக்காமல் சொல்வதென்றால் “படத்தைப் படமாக மட்டும் பார்த்தால் ரசிக்கலாம்” !!

விஜயைப் பொருத்தவரை சர்கார் ஒரு டபுள் டக்கர் பட்டாசு. வசூலுக்கு வசூலும் ஆச்சு !! வருங்கால அரசியலுக்கு பிரச்சாரமும் ஆச்சு !!
ரசிகர்களுக்கோ, இது விஜய்-முருகதாஸ் கூட்டணி திகட்டத் திகட்டக் கொடுத்திருக்கும் தீபாவளித் தித்திப்பு !!
”சூப்பர்மேன் சுந்தர்”:
”கார்ப்பரேட் கதாநாயகன்-கள்ள ஓட்டு-கொடூர அரசியல்வாதி- சவால் விட்டு விழிப்புணர்வு வசனம் வீசும் ஹீரோ - விழித்தெழும் மக்கள்-இளைஞர்கள் எழுச்சி - தேர்தலில் வெற்றி” என்ற ஒருவரிக் கதைக்குள் “டெங்கு சாவு உட்பட்ட” சமகால அரசியலை சமபங்கு கலந்து “இராமேஸ்வரம் சுந்தரை” “சூப்பர்மேன் சுந்தராக்குகிறார் டைரக்டர் முருகதாஸ். ”சூப்பர்மேன்” என்று சொல்லிவிட்ட பிறகு, இது முடியுமா? அது முடியுமா?னு கேள்வி கேட்கக்கூடாது !! பார்க்கணும், ரசிக்கணும் அவ்வளவுதான். (..பக்கத்து சீட்டு பரம ரசிகனின் “விசில்” சத்தத்தையும் சேர்த்து)
அப்படீன்னா..
“இப்படியெல்லாம் பண்ணி அரசியலை மாத்திவிட முடியாதானு” கேள்வி கேட்பவர்களுக்கு, “… இப்படி நடந்தா நல்லாத்தான் இருக்கும்” என்ற தசாவதாரம் படத்தின் கடைசிக் காட்சி வசனத்தையொட்டிய வாசகமே பதிலாக இருக்கும்...
… ஆனா, என்ன செய்ய தமிழகத்திலுள்ள 7.5 கோடிப்பேரில் ஒரு “சூப்பர்மேன் சுந்தர்” கூட இல்லையே..!! என்ன செய்ய ??
பின்குறிப்பு: முகவரி ரமேஷ், பியூஸ் மானுஷ் போன்ற சமகால சமூக ஆர்வலர்கள் பலரை பரந்துபட்ட மக்களுக்கு கொண்டுசென்று சேர்த்தமைக்காக இயக்குனர் முருகதாசுக்கு சிறப்பு வாழ்த்துக்கள்..!!
-செந்தில் ஆறுமுகம்,
07-11-2018
sentharu@gmail.coom, 87545-80274

No comments:

Post a Comment