... செந்தில் ஆறுமுகம், ஜீலை 2019
”ஆபரேசன் கமலா” ”ஆயிரம் கோடி”, ”தனி விமானம்”, ”சொகுசு விடுதி”, ”ஆம்னி பஸ்” ”எம்.ஏல்.ஏவின் விலை என்ன” ” வாய்ச்சவடால் சபாநாயகர்” ... கர்நாடகத்தில் இன்று அதிகம் பேசப்படும் வார்த்தைகளின் பட்டியலில் இருந்து எடுத்த சாம்பிள்கள் இவை...!!
யார் வெல்வார்கள் என்பதை இறுதிவரை யூகிக்கமுடியாத அளவுக்கு நடந்த உலகக்கோப்பை இறுதி ஆட்டத்தைப்போல் பரபரப்பும்,திருப்பங்களும் நிறைந்ததாய்த் தொடர்கிறது கர்நாடக அரசியல் நிலவரம். கடந்த ஆண்டு 224 தொகுதி சட்டமன்றத் தேர்தலின் மூலம் வாக்குச்சாவடியில் தொடங்கிய ஜனநாயகப் பயணம் இன்று சொகுதிவிடுதிகளில் சிறைவைக்கப்பட்டிருக்கிறது. ஆளும் காங்கிரஸ்-மதச்சார்பற்ற ஜனதா தளக் கூட்டணியின் அதிருப்தி எம்.எல்.ஏக்கள் 16பேர் ராஜினாமா செய்துவிட்டு மும்பை சொகுசு விடுதியில் அடைக்கலமாகியுள்ளனர். காங்கிரஸ், ம.ஜ.த, பா.ஜ.க, வின் எம்.எல்.ஏக்கள் தங்கள் கூட்டைவிட்டுப் பறந்துவிடக்கூடாது என்பதற்காக பெங்களூருவில் சொகுசு விடுதிகளில் அடைத்துவைக்கப்பட்டுள்ளனர். தங்கள் கட்சி எம்.எல்.ஏ.க்கள் மீது அவ்வளவு நம்பிக்கை..!! இப்படிப்பட்ட ”பறக்கும் குணம்” படைத்தவர்களுக்கு தேர்தலில் போட்டியிட இடம் ஒதுக்கியது யார்..? இன்று ஒவ்வொரு சொகுதி விடுதியின் முன்பும் நின்று காவல் காக்கும் அதே கட்சித் தலைவர்கள்தானே..?
கடந்த ஆண்டு 105 இடங்களில் வென்ற தனிப்பெரும் கட்சியான பா.ஜ.க. ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது என்பதற்காக 79 இடங்களை வென்ற காங்கிரஸ் கட்சியானது 37 இடங்களை மட்டுமே வென்ற ம.ஜ.த. கட்சிக்கு முதல்வர் பதவியை விட்டுக்கொடுத்த போதே(!!) இந்த ஆட்சி நீண்டகாலம் நிலைக்காது என்பது முடிவாகிவிட்டது. எதிரெதிர் கட்சியாக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்ட இரு கட்சிகளும் இணைந்து ஆட்சி அமைப்பது என்பதே தார்மீக ரீதியில் மக்களுக்குச் செய்யும் துரோகம். அதிலும், சட்டமன்றத் தேர்தலில் 18% வாக்குகளை மட்டுமே பெற்ற ம.ஜ.த. கட்சிக்கு முதலமைச்சர் பதவி வழங்கப்படுவது என்பது எந்தவகையிலும் நியாயமில்லை. இருந்தபோதும், இதுபோன்ற முரண்பாடு மிக்க கூட்டணிகள் அமைவதைத் தடுக்கவும், ஓட்டுக்களின் மூலம் மக்கள் ஒதுக்கிய ஒருவர் பின்வாசல் வழியாக முதல்வர் ஆவதைத் தடுக்கவும் அரசியல் சாசனத்தில் எந்த வழியும் இல்லை என்பது வருத்தத்திற்குரியது. நம் அரசியல் சாசனத்தை வடிவமைத்த அம்பேத்கர் உள்ளிட்டோர் இவ்வளவு தரக்குறைவான நிலையை நோக்கி நம் ஜனநாயகம் செல்லாது என்று நினைத்தார்களோ என்னவோ..?
“கட்சித் தாவல் தடைச் சட்டம்”, சட்டசபை விதிமுறைகள் போன்றவற்றை தங்கள் வசதிக்கேற்ப தமிழக சபாநாயகர் பயன்படுத்திக்கொண்டார்; கட்சி மாறி வாக்களித்தவர்கள் மீதுகூட இன்னும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பது குறித்தான வழக்கு இன்னும் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. கர்நாடகத்திலும் சபாநாயகர் மீதும் இதேபோன்றதொரு குற்றச்சாட்டுதான். ராஜினாமா செய்த அதிருப்தி எம்.எல்.ஏ.க்களில் 8 பேரின் கடிதம் “முறையான வடிவத்தில்” இல்லை, அதனால் ராஜினாமாவை ஏற்க இயலாது என்று கர்நாடக சபாநாயகர் ஒரே போடாகப் போட்டது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. கர்நாடக சட்டசபை விதிமுறையின் பிரிவு 202(உட்பிரிவு1ன் படி) எம்.எல்.ஏ. ஒருவர் ராஜினாமா செய்வதற்கு கொடுக்கப்படவேண்டிய கடிதத்தில் இருக்கவேண்டிய வரிகள் இது மட்டும்தான்... “I hereby tender my resignation of my seat in the house with effect from......" ... இந்த வடிவத்தில் 8 எம்.எல்.ஏ.க்கள் கடிதம் கொடுக்கவில்லையாம்..!! நம்பும்படியாகவா இருக்கிறது..?
ஒருவேளை ராஜினாமா கடிதத்தில் ராஜினாமாவிற்கான காரணத்தை 8பேரும் எழுதி இருந்தார்கள் என்ற காரணத்தை சபாநாயகர் முன்வைத்தாலும், அதுவும் எடுபடாது. ( கர்நாடக சட்டசபை விதிமுறையின்படி, காரணத்தை ராஜினாமா கடிதத்தில் எழுதக்கூடாது..) ஏனென்றால், அப்படி காரணத்தை எழுதி இருந்தால் கூட அதுகுறித்தான விவரத்தை சட்டசபையில் படித்துக்காட்டக்கூடாது என்றுதான் விதி இருக்கிறதே தவிர, இதற்காக ராஜினாமாவை ஏற்கமுடியாது என்று சொல்ல சபாநாயகருக்கு உரிமை இல்லை...!! மொத்தத்தில், ராஜினாமா விவகாரத்தை இழுத்தடித்து , அதிருப்தி காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை சமாதானப்படுத்த ஆளுங்கூட்டணிக்கு அவகாசம் வேண்டும். அதற்கு சபாநாயகர் மறைமுகமாகத் துணைபோகிறார். எந்தக் கட்சியின் பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கப்பட்டு இருந்தாலும், நடுநிலையோடு – சட்ட விதிமுறைகளின்படி செயல்பட வேண்டிய சபாநாயகர் , விதிமுறைகளின் சந்துபொந்துகளில் நுழைந்து சட்டமன்ற உறுப்பினர்களின் உரிமையைப் பறிப்பது நியாயமில்லை…!! இது ஜனநாயகத்திற்கு நல்லதில்லை..!!
சபாநாயகரின் போக்கு இப்படி என்றால், தேவகவுடா குடும்ப உறுப்பினர்களின் போக்கும் கர்நாடகக் குழப்பத்திற்கு காரணமாக இருக்கிறது என்பதை மறுக்கமுடியாது. தேவேகவுடாவின் ஒரு மகன் குமாரசாமி முதல்வராகவும். இன்னொரு மகன் ரேவண்ணா பொதுப்பணித்துறை அமைச்சராகவும் இருந்து கொண்டு ஆட்சியில் கோலோச்சுவதை காங்கிரஸ்காரர்களால் பொறுத்துக்கொள்ளமுடியவில்லை. பல்வேறு துறைகளில் நடக்கும் திட்டங்களில் செலவிடப்படும் தொகையில் காங்கிரசாருக்கான “பங்கு’ முறையாகக் கிடைப்பதில்லை என்பதும் ஒரு காரணமாகச் சொல்லப்படுகிறது.
காங்கிரசின் அதிருப்தி எம்.எல்.ஏக்களை மும்பையில் வைத்து ”முறையாகப்” பாதுகாப்பது பா.ஜ.க.தான் என்று பேசப்படுகிறது. இதற்கு சமீபத்திய சாட்சி, காங்கிரசின் எம்.எல்.ஏ. எம்.டி.பி.நாகராஜ் விவகாரம். ராஜினாமா செய்தார். மும்பை சென்றார். திரும்பி வந்தார். முந்தைய நாள், ராஜினாமாவை திரும்பப் பெற்றுக்கொள்வேன் என்று சொன்னார். அடுத்தநாளே தனிவிமானத்தில் மும்பை பறந்தார். விமான நிலையத்தில் அவரோடு இருந்தவர் பா.ஜ.கவின் முக்கிய நிர்வாகியான அசோகா.!!. இதுகுறித்தான காட்சிகள் உள்ளூர் ஊடகங்களில் ஒளிபரப்பாகி ஆட்சி அமைக்க முயற்சிக்கும் பா.ஜ.க.வின் பகீரத முயற்சிகளை அம்பலப்படுத்தின !! நீங்கள் ஆட்சி அமைக்கக் கோருவீர்களா என்று எதியூரப்பாவிடம் கேட்டபோது “…நாங்கள் என்ன சன்னியாசி மடமா நடத்துகிறோம்” என்று பதிலளித்தார்.
அதிருப்தி எம்.எல்.ஏக்களுக்கு மும்பை சொகுசு விடுதி, சொகுசு வசதி, தனிவிமான வசதி என நடக்கும் அனைத்து விஷயங்களும் எதியூரப்பாவின் பதிலுக்கு உதாரணங்களாக நிற்கின்றன. பா.ஜ.க.வின் இந்தப்போக்கு கர்நாடகாவில் மட்டுமல்ல கோவா, மேற்குவங்கும் உள்ளிட்ட பல மாநிலங்களில் தொடர்வதைப் பார்க்கிறோம். கோவாவில் கட்சி மாறி பா.ஜ.க.வுக்கு வந்தவர்களுக்கு உடனடியாக மந்திரி பதவி வழங்கப்படுகிறது. மேற்கு வங்கத்தில் 107 எம்.எல்.ஏக்கள் எங்கள் பக்கம் வரவிருக்கிறார்கள் என மேற்குவங்க பா.ஜ.க. நிர்வாகியும், மம்தா பானர்ஜிக்கு முன்னாளில் வலதுகையாக இருந்த முகுல்ராய் அறிவிக்கிறார். அப்பட்டமான ஜனநாயக விரோதப் போக்குகள் அன்றாட நிகழ்வுகளாகின்றன. கேள்வி கேட்கத்தான் ஆளில்லை..!!
வரிசையில் நின்று ஓட்டுப்போட்டு தங்களுக்கு நல்லாட்சியை வழங்குவார்கள் என்று எதிர்பார்த்த மக்களின் மனநிலையை யோசித்துப் பார்க்கிறேன். அங்குள்ள கிராம மக்கள், விவசாயிகளின் எண்ண ஓட்டம் எப்படியிருக்கும் என எண்ணிப்பார்க்கிறேன். சில மாதங்களுக்கு முன்பு கர்நாடக சட்டசபையில் வருவாய்த்துறை அமைச்சர் தேஷ்பாண்டே வெளியிட்ட ஒரு அறிவிப்பு குறிப்பிடத்தக்கது. ”…மாநிலத்திலுள்ள 30 மாவட்டங்களில் 16 மாநிலங்கள் கடும் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளது. தேசிய அளவில் “நிரந்தர வறட்சியை எதிர்நோக்கும்” 24 மாவட்டங்களின் பட்டியலில் இந்த 16 மாவட்டங்களும் இடம் பெற்றுள்ளது. ராஜாஸ்தானை விட சில மாவட்டங்களில் வறட்சி அதிகமாகவுள்ளது” என்றார்.
இது உண்மையாக இருக்கும்பட்சத்தில், இப்படிப்பட்ட ”வறட்சி” மாநிலத்தின் சட்டமன்ற உறுப்பினர்கள் எவ்வளவு அர்ப்பணிப்போடு மக்கள் நலப்பணிகளைக் கவனித்திருக்க வேண்டும். மாநிலமே “வறட்சியில்” இருந்தாலும் பரவாயில்லை தங்களை “வளப்படுத்திக்” கொண்டால் போதும் என்று அணிமாறுகிறார்கள் எம்.எல்.ஏக்கள். இதைப் பார்க்கும்போது, தவறாகத் தேர்ந்தெடுத்துவிட்ட எம்.எல்.ஏ.க்களை பதவியிறக்க தங்களுக்கு அதிகாரம் ஏதும் இல்லையே என்று மக்கள் புலம்புவதைத் தவிர வேறென்ன செய்ய முடியும்..?
மேலும், பட்ஜெட்டிற்குப் பிறகான முக்கிய நிதிமசோதாக்கள் கூட இன்னும் நிறைவேற்றப்படவில்லை. இந்த நிதி ஆண்டிற்கான துறை ரீதியான பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதற்கான பணிகளே இன்னும் முடியவில்லை. ஆனால், சட்டசபையில் தற்போதைய கவனம் எல்லாம் “நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு” எடுக்கப்படுமா.. இல்லை “நம்பிக்கை கோரும் வாக்கெடுப்பு” நடத்தப்படுமா என்பதிலேயே இருக்கிறது.
வெற்றிக்குப் பல தந்தைகள் உண்டு; தோல்வி என்றுமே அனாதைதான் என்பார்கள். அதுபோல, நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரசின் பெருந்தோல்வி, ராகுலின் ராஜினாமா போன்றவை இப்பிரச்னைகள் வேகமாக வெடிப்பதற்குக் காரணமாக இருக்கின்றன.
எதிர்க்கட்சிகள் மாந்திரீகம் செய்து ஆட்சியைக் கவிழ்த்து விடுவார்கள் என்ற அச்சத்தில் எலுமிச்சம்பழத்தை கர்நாடக சட்டமன்ற வளாகத்திற்குள் கொண்டுசெல்லத் தடைவிதிக்கிறார்கள். ஆட்சிக் கட்டில் மீது அவ்வளவு ஆசை கொண்ட ஆட்சியாளர்களுக்கு, இந்த ஆட்சியே மக்கள் நலனுக்குத்தான், அவர்களின் வளர்ச்சிக்குத்தான் என்ற சிந்தனை துளியாவது இருந்திருந்தால் கர்நாடகாவில் இவ்வளவு குழப்பம் நடந்திருக்குமா..?
இதில் மிகவும் வேதனையளிக்கும் விஷயம் என்னவென்றால், எமர்ஜென்சியை எதிர்த்து நின்று ஜனநாயகத்தை தூக்கிப்பிடித்த ”லோக்நாயக்” ஜெயப்பிரகாஷ் நாராயணின் வழியைப் பின்பற்றி வந்த தேவேகவுடா, சித்தராமையா அவர்களின் கூட்டணி ஆட்சியில் இவ்வளவு “ஜனநாயகப் படுகொலைகள்” தொடர்வதுதான்..