Saturday, 10 November 2018

அனைத்து வீட்டிற்கும் ”100 யூனிட் மின்சாரம் -இலவசம்” அவசியமா?

1.85கோடி குடும்பத்திற்கும் ”100 யூனிட் மின்சாரம் -இலவசம்” அவசியமா?
 -செந்தில் ஆறுமுகம்

சமீபகாலத்தில் கொடுக்கப்பட்ட ஒரு அபத்தமான, ஆபத்தான இலவசம் என்பது “100 யூனிட் மின்சாரம்” அனைத்துக் குடும்பங்களுக்கும் இலவசம் என்பது. 2016 சட்டமன்றத்தேர்தல் அறிக்கையில், மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்களால் அறிவிக்கப்பட்ட திட்டம் இது. தொடங்கப்பட்ட ஆண்டாகிய 2016ல், இந்த இலவசத்திற்காக அரசு ஒதுக்கிய தொகை 1609கோடி(ஓராண்டிற்கு). மிக்சி-பேன் - டிவி போன்றவை எல்லாம் ஒருதடவை ஆகும்(One time Expense) செலவு. இந்த 100 யூனிட் மின்சாரம் ஆண்டுதோறும் தொடரும் செலவு(Recurring Expense). மின்சார உற்பத்தி செலவு அதிகமாக, அதிகமாக இந்த 1609கோடி என்பது 2000கோடி,3000கோடி என அதிகரித்துக்கொண்டே செல்லும்.

வீட்டு மின்சாரத்திற்கு இதுபோன்ற இலவசங்கள் கொடுப்பது அவசியமல்ல. அதுவும், ஏசி வைத்திருப்போர் வீடுகள் உட்பட அனைத்து வீடுகளுக்கும் இதுகொடுக்கப்பட்டு வருகிறது எவ்வளவு பெரிய அபத்தம்.

இருந்தபோதும், மிகவும் ஏழையாக இருப்பவர்களுக்கு இத்திட்டம் உதவியாக இருக்கும் என்று அரசு நினைத்தால் “பரம ஏழை” என்று அரசாங்கத்தின் கணக்கெடுப்பில் உள்ள 18லட்சம்பேருக்கு(அந்தியோதயா ரேசன் அட்டை வைத்திருக்கும் 18,62,615 பேருக்கு. மொத்த ரேசன் அட்டை: 1.85கோடி) மட்டும் கொடுத்தால் கூடப்போதுமானது. ( முதல்வர் கருணாநிதி ஆட்சிக்காலத்தில், கட்டணமில்லாமல் குடிசைகளில் ஒரு பல்பு மட்டும் மாட்டிக்கொள்ள அனுமதி தரப்பட்டிருந்தது. அதற்கு “ஒத்த லைட்” திட்டம்” என்ற பெயர் இருந்தது. இலவச டிவி கொடுக்க ஆரம்பித்தபிறகு இத்திட்டம் படிப்படியாக மாற்றப்பட்டு, அனைத்து வீடுகளுக்கும் முழுமையான மின்சார இணைப்பு வழங்கப்பட்டது. ரூ.1200 மின் இணைப்புக் கட்டணம், மாதந்தோறும் ரூ.100கட்டுவதற்கு சலுகை அளிக்கப்பட்டது..)

அடுத்து வரும் எந்த ஆட்சியாளாருக்காவது இந்த 100யூனிட் மின்சார இலவசத்திட்டத்தை மாற்றுவதற்கு தைரியம் வருமா? ஓட்டுவங்கிக்குப் பயந்து திட்டத்தை அப்படியே தொடர்வதற்கே விரும்புவார்கள் என்பதே எதார்த்த நிலை..!!
ஓட்டுவங்கியைக் கவர பட்ஜெட்டுக்கு வேட்டுவைக்கும் திட்டங்களை அறிவித்துவிட்டு... பிறகு அந்த ஓட்டுவங்கியின் எதிர்ப்பைச் சம்பாதிக்க நேரிடும் என்று “அபத்தமான” திட்டங்களைத் தொடரும்போக்கு முடிவுக்குவரும் காலம் கண்ணில் தெரியவில்லை..!!!

- செந்தில் ஆறுமுகம்,
11-11-2018,  
கருத்துப்பகிர: 87545-80274 ,sentharu@gmail.com

No comments:

Post a Comment