Friday, 21 September 2018

உள்ளாட்சித் தேர்தல் தள்ளிப்போகக் காரணமென்ன ?

உள்ளாட்சித் தேர்தல் தள்ளிப்போகக் காரணமென்ன ?                                                சட்டச் சிக்கலா ? தேர்தல் கணக்குகளா ?
                                  ஆகஸ்ட் - 2018
                                                       செந்தில் ஆறுமுகம், 8754580274
”உள்ளாட்சித் தேர்தலை எப்போதுதான் நடத்துவீர்கள்..?” தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையத்தின் மீது தொடுக்கப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணையின் போது உயர்நீதிமன்றம் கேட்ட கேள்வி இது. ஒட்டுமொத்த தமிழக மக்களும், சமூக ஆர்வலர்களும், பல அரசியல் கட்சிகளும் கடந்த 2 ஆண்டுகளாகத் தொடர்ந்து கேட்டுவரும் கேள்வியும் இதுவே.
என்னதான் பிரச்னை?  
இந்திய அரசியல் சாசனத்தின் 73 வது மற்றும் 74வது திருத்தத்தின் அடிப்படையில் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை உள்ளாட்சி அமைப்புகளான  கிராமப் பஞ்சாயத்துகள், பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளுக்கு முறையாகத் தேர்தல் நடத்தப்படவேண்டும். இந்தத் தேர்தலை நடத்துவதற்குப் பொறுப்பான அமைப்பு “மாநிலத் தேர்தல் ஆணையம்” ஆகும். 1996 முதல், உள்ளாட்சித் தேர்தல்கள் எந்தப்பிரச்னையும் இன்றி 2001, 2006, 2011 என 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வந்தன. 2011ல் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் 2016ம் ஆண்டு அக்டோபர் மாதத்தோடு நிறைவடைந்தது. எனவே, மாநிலத் தேர்தல் ஆணையம் அடுத்த 5 ஆண்டுகளுக்கான உள்ளாட்சிப் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்க வேண்டி தேர்தல் தேதிகளை அறிவித்தது.  17.10.2016, 19.10.2016 ஆகிய நாட்களில் தேர்தல் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டன. கட்சி சார்பில் போட்டியிட்டவர்கள், சுயேச்சைகள் என அனைத்துத் தரப்பினரும் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
வேட்புமனு தாக்கல் முடிந்த  இறுதி நாளுக்கு அடுத்த நாளன்று(அக் 4,2016)  சென்னை உயர்நீதிமன்றம் உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பை ரத்து செய்து ஒரு அதிரடி உத்தரவு பிறப்பிக்கிறது. ஏன் ?  உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்குப் பின்பற்றப்படவேண்டிய விதிமுறைகளை மாநிலத் தேர்தல் ஆணையம் முறையாகப் பின்பற்றாமல் அவசரகோலத்தில் தேர்தலை அறிவித்த முறை சட்டத்திற்குப் புறம்பானது என்ற முடிவுக்கு உயர்நீதிமன்றம் வந்ததால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதில் ஆச்சர்யம் என்னவென்றால், திமுக தொடர்ந்த வழக்கில்தான் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது,. ஆனால், திமுக போட்ட வழக்கு என்னவெனில் பழங்குடியினருக்கு உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட முறையான பிரதிநிதித்துவம்/இடஒதுக்கீடு கொடுக்கப்படவில்லை என்பதுதான். ஆனால், திமுகவின் இடஒதுக்கீடு குறித்தான வாதத்தை ஏற்காத நீதிமன்றம் மேற்சொன்ன வேறொரு காரணத்திற்காக உள்ளாட்சித் தேர்தலை ரத்துசெய்தது.  அதேசமயத்தில், விதிமுறைகளை முறையாகப் பின்பற்றி டிசம்பர் 31க்குள் தேர்தலை நடத்திமுடிக்கவேண்டும் என்றும் உத்தரவிட்டது நீதிமன்றம். அதாவது, டிசம்பர் 2016க்குள் தேர்தலை நடத்திமுடிக்கவேண்டும் என்று நீதிமன்றம் வலியுறுத்தியது. ஆனால், மாநிலத் தேர்தல் ஆணையம் மற்றும் தமிழக அரசின் அணுகுமுறைகளைப் பார்த்தால் டிசம்பர் 2019க்குள் கூட தேர்தல் நடத்தி முடிக்கப்படாது என்பதுபோல் தெரிகிறது.
நீதிமன்றம் உத்தரவிட்டும் தேர்தல் நடத்தப்படாத இந்தப் பின்னணியில்தான் மாநிலத் தேர்தல் ஆணையம் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தி.மு.க.வால் தொடுக்கப்படுகிறது.  இந்த வழக்கு விசாரணையின்போதுதான் நீதிமன்றம் “…”உள்ளாட்சித் தேர்தலை எப்போதுதான் நடத்துவீர்கள்..?” என்று கேள்வி கேட்டதோடு, இத்தேர்தல் நடத்தப்படாமல் போனதற்குக் காரணமான உயரதிகாரிகள் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கமளிக்கவேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.
திமுக உச்சநீதிமன்றத்தில் தொடுத்த மற்றொரு வழக்கை(2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் வார்டு வரையறைகள் செய்யப்பட்டு தேர்தல் நடத்தப்படவேண்டும் என்று கோரி) கெட்டியாகப் பிடித்துக்கொண்ட தமிழக அரசு, 2011 மக்கள் தொகை அடிப்படையில் வார்டுகளின் எல்லைகள் மாற்றப்பட உள்ளன. அதனால், புதிதாக வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்படவேண்டும். இந்தப் பணிகள் முடிந்தபிறகே உள்ளாட்சித் தேர்தலை நடத்தமுடியும் என்று கிட்டத்தட்ட கடந்த 2 ஆண்டுகளாக கிளிப்பிள்ளை போல் நீதிமன்றத்தில் பதிலளித்து வருகிறது தமிழக அரசு. ஆனால், உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றம் ஆகியவை தமிழக அரசு சொல்லும் எந்தக்காரணங்களும் ஏற்புடையவை அல்ல, உடனே தேர்தலை நடத்துங்கள் என்று அழுத்தந்திருத்தமாகச் சொல்லிவிட்டது.
நீதிமன்றங்கள் இவ்வளவு வலியுறுத்தியும் தமிழக அரசு உள்ளாட்சித் தேர்தலை நடத்தத் தயங்குவது ஏன்.?  காரணம் சட்டச்சிக்கல் அல்ல, அரசியல் சிக்கல். இரட்டை இலைச் சின்னம் பெற்ற பிறகும் ஆளுங்கட்சியாக உள்ள அதிமுக ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் வெற்றிபெற முடியவில்லை. உள்ளாட்சித் தேர்தல் வந்தால் முதல்வர், துணைமுதல்வர் அணிகளுக்கு இடையே உள்ள பிளவு அப்பட்டமாய் வெளிச்சத்திற்கு வரும். எந்த அணிக்கு எவ்வளவு சீட் கொடுப்பது என்பதில் இழுபறி நிலை ஏற்படும். ஒருவேளை, ஆர்.கே. நகரில் தோற்றதுபோல், உள்ளாட்சித் தேர்தலிலும் பல இடங்களில் தோல்வியைத் தழுவினால் அது ஆளுங்கட்சிக்கு அவமானமாகிவிடும். அது அடுத்த ஆண்டு வரவிருக்கிற நாடாளுமன்றத் தேர்தலிலும் பாதிப்பை ஏற்படுத்தும்.  அதாவது, “உள்ளாட்சித்” தேர்தல் நடத்தினால் “உள்ள” ஆட்சியும் ஆட்டம் கண்டுவிடுமோ என்று அதிமுக அரசு தேர்தல் கணக்குப்போடுகிறது. இதுபோன்ற அரசியல் காரணங்களாலேயே உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாமல் தள்ளிப்போய்க் கொண்டிருக்கிறது. உண்மையில் சட்டச்சிக்கல் ஏதுமில்லை.
”மாநில சுயாட்சி” வேண்டி உரத்த குரல்கொடுத்த தமிழகம் இன்று “கிராம சுயாட்சியை” புறந்தள்ளுவது வேதனையளிக்கிறது. மத்தியில் அதிகாரங்கள் குவிக்கப்படக்கூடாது, அது மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படவேண்டும் என்று கோரினோம் நாம். ஆனால், மாநிலத்தின் அதிகாரங்களை உள்ளாட்சி அமைப்புகளோடு பகிர்ந்துகொள்ள தமிழகம் தயாராக இல்லை என்பதையும் தாண்டி உள்ளாட்சித் தேர்தலையே நடத்ததாமல் 2 ஆண்டுகள் இழுத்தடித்துவிட்டு, தேர்தல் நடக்குமா, நடக்காதா என்று உள்ளாட்சித் தேர்தல் அந்தரத்தில் தொங்கும் நிலை வேதனையின் உச்சகட்டம்.
 04.10.2016 அன்று உள்ளாட்சித் தேர்தலை ரத்துசெய்து உத்தரவிட்டார் நீதிபதி.கிருபாகரன் அவர்கள். அந்தத் தீர்ப்பின் தொடக்கத்தில் மகாத்மா காந்தியின் இந்த வரிகளை மேற்கோள் காட்டினார்:   
“.… உண்மையான  ஜனநாயகம் என்பது மத்தியிலும், மாநிலத்திலும் ஒருசிலர் அமர்ந்துகொண்டு ஆட்சி செய்வதல்ல. அது, ஒவ்வொரு கிராம மக்களும் ஆட்சியில் பங்கேற்பதே”
காந்தியின் கனவுப்படி, அனைத்து மக்களும் ஆட்சியில் பங்கேற்க வழிவகுக்கும் உள்ளாட்சித் தேர்தலை தமிழக அரசும், மாநிலத் தேர்தல் ஆணையமும் இனியும் தாமதிக்காமல் நடத்தவேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு. இதைத் தமிழக அரசு விரைவில் பூர்த்தி செய்யும் என்று நம்பிக்கையோடு காத்திருப்போம். 

Send ur comments to :   sentharu@gmail.com,   8754580274

Unresolved problems in Society? நாட்டில் தீர்க்க முடியாத பிரச்னைகள் எவை ?

புதிய தலைமுறை வார இதழில்( மக்கள் கேள்விகள் - பிரபலங்கள் பதில்கள் பகுதியில்) கேட்கப்பட்ட ‘நாட்டில் தீர்க்க முடியாத பிரச்னைகள் எவை”? என்ற கேள்விக்கு என்னுடைய பதில் ( செப் 27, 2018)



நாட்டில் தீர்க்க முடியாத பிரச்னைகள் எவை..?
- செந்தில் ஆறுமுகம்
தீர்க்க முடியாத பிரச்னைகள் என்று பலவற்றைப் பட்டியலிடலாம். ஆனால், அவற்றைத் தீர்க்க ”முடியாத” பிரச்னைகள் என்று அழைப்பதை விட, ஆட்சியாளர்கள் தீர்க்க “முயலாத” பிரச்னைகள். என்று அழைப்பதே பொருத்தமாக இருக்கும். அவர்கள் தீர்க்க “விரும்பாத” பிரச்னைகள் என்று சொல்வது இன்னும்கூடப் பொருத்தமாக இருக்கும்.
பள்ளிக்கல்விக்கு மட்டும் தமிழக அரசு ஆண்டுக்கு ரூ.27 ஆயிரம்கோடியைச் செலவழித்தும், இன்னும் கணிசமான பிள்ளைகளின் பெற்றோர்கள் கடன் வாங்கியாவது தனது பிள்ளைகளைத் தனியார் பள்ளியில் படிக்கவைக்க முற்படுவது ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வரும் ஒரு அவலம். ஆட்சியாளர்கள் பல்லாண்டுகளாய் தீர்க்க “முயலாத” பிரச்னை இது.
பாதி உயிர் போயிருந்தாலும் கோடிகளைக் கொட்ட வழியிருந்தால், காப்பாற்றி விடலாம். அதேசமயத்தில், அடுத்த வேளைச் சோற்றுக்கு வழியில்லை என்றால் தீவிர சளித்தொல்லையால் பாதிக்கப்பட்டவன்கூட சவமாய்ப் போவதற்கு சாத்தியம் இருக்கிறது. ரயிலில் முன்பதிவில்லாத பெட்டி, உட்கார்ந்து செல்லும் - தூங்கும்வசதியுடைய - குளிர்சாதன வசதிகொண்ட பெட்டி எனப் பலவகைகள் இருப்பதுபோல் ஒவ்வொருவரின் கையில் உள்ள காசைப் பொறுத்தே இங்கு மருத்துவ சேவை கிடைக்கும் என்ற கொடுமை அடித்தட்டு மக்களைப் பொருத்தவரை ஒரு மிகமுக்கியமான பிரச்னை; ஆட்சியாளர்கள் தீர்க்க “முயலாத” பிரச்னை.
இப்படி மக்கள் ஒவ்வொருவருக்கும் அவசியம் கிடைக்க வேண்டிய தரமான கல்வியும், மருத்துவமும் ஏழைக்கு எட்டாக்கனியாக நிற்கும் சூழலில் உடலை உருக்கி, உயிரைக்குடிக்கும் சாராயம் மட்டும் தெருவெங்கும் தாராளமாய்க் கிடைக்கிறது. அரசு சம்பாதிக்கும் ஒவ்வொரு 100ரூபாய் வரிப்பணத்தில் 27 ரூபாய் டாஸ்மாக் கடைகள் மூலம் சம்பாதிக்கப்பட்டது என்பது பெருமைக்குரிய விஷயமா என்ன ?. மக்களை மெல்லக்கொல்லும் விஷயத்தை அரசாங்கமே தாராளமாய் சப்ளை செய்வது கொடுமையிலும், கொடுமையான பிரச்னை. ஆட்சியாளர்கள் தீர்க்க “விரும்பாத” ஒரு பிரச்னை.
“விவசாயிகள் நாட்டின் முதுகெலும்பு” என்று மேடைதோறும் முழங்குவார்கள். ஆனால், அவனுக்கு பயிரைப் பாதுகாக்கத் தேவையான நேரத்தில் பாசன நீர் கிடைக்காது, அவன் முதுகொடித்து பயிர் செய்த விளைபொருளுக்கு விலை கிடைக்காது, வெள்ளமோ-வறட்சியோ பயிரைக் காவு வாங்கினால் காப்பீடு முறையாகக் கிடைக்காது, நவீன தொழில்நுட்பங்கள் எதுவும் இவனின் வயல்வரை வந்துசேராது. இப்படி, நாட்டுக்குப் படியளப்போரின் நிலை பரிதாபமாக உள்ள பிரச்னை என்றும் தொடரும் ஒரு தீர்க்க “முயலாத” பிரச்னை.
”காவல்துறை மக்களின் நண்பன்” என்று எத்தனை முறை, எங்கு எழுதிவைத்தாலும் உண்மையில் ”காவல்துறை,” அதிகாரமும்-பணபலமும் உள்ளவர்களுக்கே” நெருங்கிய நண்பன்” என்ற எழுதப்படாத சட்டத்தை அச்சுப்பிசகாமல் பின்பற்றும் காவல்துறையின் போக்கு நீண்ட நெடிய ஆண்டுகளாக உள்ள ஒரு தீர்க்க “முயலாத” பிரச்னை.
சகமனிதனை இழிவுபடுத்தும் ”சாதி”க்கொடுமைகளுக்கு எதிராக, மூடநம்பிக்கைகளுக்கு எதிராகப் பெரும்போர் புரிந்த பெரியார் மண்ணில் இன்னும் சாதிக்கொடுமைகளும், சாதிக்கலவரங்களும், மூட நம்பிக்கைகளுக்கும் விடாது தொடர்கிறது. ஜனநாயகத்தின் அடிநாதமான தேர்தல் காலங்களில் சாதிப்பேய் தலைவிரித்தாடுவதும், ஓட்டுவங்கிக்காக சாதிப் பிரிவினைகளை அரசியல் கட்சிகள் நீரூற்றி வளர்ப்பதும், ஆட்சியாளர்கள் என்றும் தீர்க்க “விரும்பாத” பிரச்னை.
”விடியாத இரவென்று எதுவுமில்லை; முடியாத பகலென்று எதுவுமில்லை”.
அதுபோல, தீர்க்க முடியாத பிரச்னைகள் என்று எதுவும் இல்லை. பிரச்னைகளைத் தீர்க்க வேண்டிய ஆட்சியாளர்கள் அவைகளை வளர்த்தெடுக்கிறார்கள் அவ்வளவுதான்.
இலஞ்ச-ஊழலில் ஊறித்திளைத்து, அனைத்துத் துறைகளையும் சீரழித்துப் பயிரை மேயும் வேலியாகிறார்கள். பிரச்னைகளைத் தீர்க்காத ஆட்சியாளர்களைத் திரும்பத் திரும்ப நாம் தேர்ந்தெடுக்கிறோம்..!! ஏன் ? எவ்வளவு காலம் இப்படியே தொடரப்போகிறோம்? என்று வாக்களிக்கும் ஒவ்வொருவரும் யோசிக்கத் தொடங்கிவிட்டால், மக்கள் பிரச்னைகளைத் தீர்க்க ”முயலாதவர்கள்” மீண்டும் ஆட்சிக்கு வரமுடியாது என்ற நிலைவந்துவிட்டால், நீண்டகாலமாகத் தொடரும் “தீர்க்க முடியாத” பிரச்னைகளுக்குத் தீர்வுகிடைத்துவிடும்.

87545-80274,  sentharu@gmail.com