Monday, 26 November 2018

பெண்களுக்கு சட்டமன்றம், நாடாளுமன்றத்தில் 33% இடஒதுக்கீடு சட்டம்..? என்ன ஆனது ? 2019 தேர்தலில் முக்கியத்துவம் பெறுமா.?

நீதித்துறையில், அரசு நிர்வாகத்தில், சட்டமன்ற-நாடாளுமன்றத்தில் உள்ள பெண்களின் சதவிகிதம் என்ன..?  அலசுகிறது இக்கட்டுரை...

-செந்தில் ஆறுமுகம், நவம்பர் 2018

புதிய தலைமுறை வார இதழில்..



என்ன ஆனது  பெண்களுக்கு 33% ஒதுக்கீடு சட்டம்.. ?
-செந்தில் ஆறுமுகம்

+2 தேர்வுகள் தேதி அறிவிப்பு, தேர்வு முடிவுகள் அறிவிப்பு குறித்தான செய்திகள் வெளியாகும்போது அதைச் சில நிமிடங்கள் நிறுத்தி நிதானமாக சிலதடவை வாசிப்பேன். ஒவ்வொரு முறை வாசிக்கும்போதும், மனதுக்குள் ஒரு இனம்புரியா மகிழ்வு நிகழும். அந்த சமயத்தில், பழைய பழமொழி ஒன்றும், பாரதியின் பாடல் ஒன்றும் நினைவுக்கு வரும். ”அடுப்பூதும் பெண்ணுக்குப் படிப்பெதற்கு” என்பதே அந்தப் பிற்போக்குப் பழமொழி. மனதிற்குள் ஒலிக்கும் பாரதியின் பாடல் இதுதான்:

ஏட்டையும் பெண்கள் தொடுவது தீமையென்
றெண்ணி யிருந்தவர் மாய்ந்துவிட்டார்
வீட்டுக்குள்ளே பெண்ணைப் பூட்டிவைப்போமென்ற
விந்தை மனிதர் தலைகவிழ்ந்தார்..?

தேர்வு குறித்த செய்திக்கும், பாரதியின் பாடலுக்கும் என்ன சம்பந்தம்…?  இருக்கிறது !! 
தேர்வு எழுதியவர்களில் மாணவர்கள் எத்தனை பேர், மாணவிகள் எத்தனை பேர் என்ற புள்ளிவிவரத்தில்தான் என் மகிழ்ச்சியின் மையப்புள்ளி இருக்கிறது.

2018ல் மார்ச் 1ம்தேதி துவங்க இருந்த +2 தேர்வு தேதி அறிவிக்கப்பட்டபோது, இப்படி செய்தி வெளியாகி இருந்தது:

“… +2 தேர்வெழுதப்போகும் மாணவர்களின் எண்ணிக்கை: 4,00,179 ; மாணவிகளின் எண்ணிக்கை: 4,60,225.   மாணவர்களைவிட மாணவிகளின் எண்ணிக்கையே அதிகம்(சுமார் 60ஆயிரம் பேர் அதிகம்)”

அந்த ஆண்டு தேர்வு முடிவுகள் மே 16ம்நாள் வெளியாகியிருந்தது. அப்போது, வெளியான செய்தி இது:

“… +2 தேர்ச்சி பெற்றவர்களில் மாணவர்களின் சதவிகிதம்: 87.7% ; மாணவிகளின் சதவிகிதம்: 94.1%. மாணவர்களைவிட மாணவிகளின் தேர்ச்சி விகிதம் 6.4% அதிகம்”.
இது, கடந்த ஓராண்டு மட்டும் நடந்த அரிய நிகழ்வல்ல. கடந்த பல ஆண்டுகளாகத் தொடரும் அற்புதம் !!

  ”…அடுப்பூதும் உங்களுக்குப் படிப்பெதுக்கு?  நீங்கள் பாத்திரங்களைத் தேய்த்தால் போதும்;  புத்தகங்கள் படிப்பதை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்” என்றிருந்த, பாரதி பாடிய “விந்தை மனிதரின்” ஆணாதிக்கச் சிந்தனையின் அடக்குமுறையை உடைத்தெறிந்து,  நாங்கள் படிப்போம்; உங்களை விட அதிகம் படிப்போம்; உங்களை விட கூடுதலாக மதிப்பெண் எடுப்போம் என்று பெண்பிள்ளைகள் சாதித்துக் காட்டும் செய்தியை ஒவ்வொரு ஆண்டும் படிக்கும்போதும், பார்த்துப் பார்த்து மகிழ்வேன். சமூக மேம்பாட்டின் மேல் அக்கறையுள்ள ஒவ்வொருவருக்கும், முற்போக்கு சிந்தனையுள்ள ஒவ்வொருவருக்கும் இது மகிழ்வான செய்தியாகத்தானே இருக்கமுடியும். இதில் மாற்றுக்கருத்துண்டோ..? நிற்க !!
தேர்வுகளிலிருந்து… தேர்தல்கள் நோக்கி…

சரி.  பெண்களின் பள்ளிப்படிப்பு குறித்த பெருமிதத்திலேயே மூழ்கிவிடாமல் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்வோம். பள்ளி, கல்லூரி படிப்பை முடித்த பெண் பிள்ளைகள் சமுதாயத்தின் போக்கைத் தீர்மானிக்கும் முக்கிய அங்கங்களில் எந்த அளவு பங்கு வகிக்கிறார்கள் என்பதைப் பார்ப்போம்.

மீண்டும் பாரதி.!!

பெண்கள் குறித்து அவர் பாடிய கும்மிப் பாடலின் அடுத்த வரிகள் இப்படிப் போகிறது…
”…பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்
பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்”

பள்ளி செல்ல வாய்ப்பு மறுக்கப்பட்ட காலத்திலேயே, பெண்கள் படித்தால் மட்டும்போதாது ”சட்டங்களை உருவாக்கும்” உயர்ந்த நிலைக்கு வரவேண்டும் என்று கனவு கண்டான் பாரதி. தன் கனவை இந்த வரிகளுக்குள் இறக்கிவைத்துவிட்டு இறந்து போனான். அந்த மீசைக் கவிஞனின் ஆசை நிறைவேறியதா.. ?  பொத்தம் பொதுவாகப் பார்க்காமல், புள்ளிவிவரத்தோடே பார்த்துவிடுவோம்.

சட்டத்தை உருவாக்கும் சட்டமன்றம்/நாடாளுமன்றம் ,  சட்டத்தை செயல்படுத்தும் அரசு அதிகாரிகள், சட்டம் தொடர்பான சிக்கல்களைத் தீர்த்துவைக்கும் நீதிமன்றம் ஆகிய ஜனநாயகத்தின் மூன்று முக்கிய அங்கங்களில் பெண்களின் பிரதிநிதித்துவம் எந்த அளவு இருக்கிறது என்பதைப் பார்த்தால் பாரதி பாடிய “சட்டங்களை உருவாக்கும்” நிலைக்கு பெண்கள் வந்தடைந்திருக்கிறார்களா என்பது தெரியும்.

நாட்டின் மொத்த ஜனத்தொகையில்  கிட்டத்தட்ட சரிபாதி(48%) பெண்கள்.  ஆனால், நாட்டை வழிநடத்தும் நாடாளுமன்றத்தில் எம்.பிக்களாக உள்ள பெண்களின் சதவிகிதம் எவ்வளவு..?
வெறும் 12%. மட்டுமே. ( லோக்சபாவில் உள்ள 543 எம்.பிக்களில் 62 பேர் மட்டுமே பெண்கள்; , ராஜ்யசபாவில் உள்ள 244 எம்.பிக்களில் பெண்களின் எண்ணிக்கை: 28). நாடாளுமன்றத்தில் மட்டுமல்ல, அனைத்து மாநில சட்டமன்றங்களிலும்  இதேபோன்ற நிலைதான் இருக்கிறது. இதில் கொடுமை என்னவென்றால் படிப்பறிவு மிக்க மாநிலம் என்று சொல்லப்படும் கேரள சட்டசபையில் உள்ள பெண் எம்.எல்.ஏ.க்கள் 6% மட்டுமே.  முன்னேறிய மாநிலமான தமிழகத்தில் உள்ள பெண் சட்டமன்ற உறுப்பினர்கள் 9% !!(2016 தேர்தலின்படி);  பின்தங்கிய மாநிலம் எனக் கருதப்படும் பீகாரில் கூட இது 12% ஆக உள்ளது !!. ஆக, சட்டம் இயற்றும் இடத்தில், அது சட்டமன்றமாக இருந்தாலும் சரி, நாடாளுமன்றமாக இருந்தாலும் சரி, அங்கு பெண்களின் பிரதிநிதித்துவம் மிகக்குறைவு என்பது தெளிவாகத்தெரிகிறது.

சட்டத்தை செயல்படுத்தும் இந்திய ஆட்சிப்பணித்துறையிலும் பெண்களின் பிரதிநிதித்துவம் சொல்லிக்கொள்ளும்படி இல்லை. 1974ம் ஆண்டில் தொடங்கி, அடுத்த  40 ஆண்டுகளில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளாக தேர்ச்சிபெற்ற 4448பேரில் 687பேர் மட்டுமே பெண்கள் என்கிறது ஒரு ஆய்வறிக்கை. அதாவது, 15% மட்டுமே பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள். வேறு வார்த்தையில் சொல்லவேண்டும் என்றால், 100 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியில் சேர்ந்தால் அதில்  85% ஆண்களே !!

சட்டச் சிக்கல்களைத் தீர்த்துவைத்து, நாட்டிற்கு நீதி வழங்கும் நீதிமன்றங்களிலும் பெண்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் இல்லை. உச்சநீதிமன்றத்தின் கடந்த 68ஆண்டுகால வரலாற்றில் மொத்தம் 8பெண்கள் மட்டுமே நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். 1989ல் முதல் பெண் நீதிபதியாக பாத்திமா பீவி அவர்கள் நியமிக்கப்பட்டார். 1950ல் துவங்கப்பட்ட உச்சநீதிமன்றம் தனது முதல் 39 ஆண்டுகளில் ஒரு பெண்ணைக்கூட நீதிபதியாகத் தேர்ந்தெடுக்கவில்லை என்ற செய்தி அப்போதுதான்  பெருவாரியான மக்களின் கவனத்திற்கு வந்தது !! தற்போதைய நிலை என்ன ? தற்போது, உச்சநீதிமன்றத்தில் உள்ள 28 நீதிபதிகளில் பானுமதி,இந்துமல்ஹோத்ரா,இந்திரா பானர்ஜி என மூன்று பேர் மட்டுமே பெண் நீதிபதிகள். அதாவது, 11% மட்டுமே. ஒரே சமயத்தில் மூன்று பெண் நீதிபதிகள் இருப்பது இதுவே முதல் முறை !! உச்சநீதிமன்ற வரலாற்றில் இதுவரை, ஒரு பெண் நீதிபட கூட தலைமை நீதிபதியாகப் பொறுப்பு வகித்ததில்லை!!. ஆக, நீதிமன்றங்களிலும் பெண்களுக்கு நீதியில்லை. !!

நீதித்துறையில் 11% ; நாடாளுமன்றத்தில் 12% ; ஆட்சிப்பணித்துறையில் 15% ; என்ற அளவில்தான் ஜனநாயகத்தின் மூன்று முக்கிய அங்கங்களில் பெண்களின் பிரதிநிதித்துவம் உள்ளது. இது கவனத்துக்குரியது மட்டுமல்ல கவலைக்குரியதும் கூட !!  இதற்கான காரணங்கள் பல. அரசியல்வாதி, ஐ.ஏ.எஸ், நீதிபதி என ஒவ்வொரு துறையிலும் பெண்களின் பங்களிப்பு குறைவதற்கு தனித்தனி காரணங்கள் உண்டு. தீர்வுகள் உண்டு.  அனைத்தையும் இங்கு ஆராய்வது சாத்தியமில்லை. ஆகவே சட்டமன்றம், நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 33% பிரதிநிதித்துவம் தர வாய்ப்பளிக்கும்  சட்டமானது, முன்னர் விவாதிக்கப்பட்டதே(108வது அரசியல் சாசனத் திருத்தம்) அது 
இப்போது என்ன ஆனது என்பதை மட்டும் திரும்பிப் பார்ப்போம்,

புதிய சட்டங்களைக் கொண்டுவருவதற்கான மசோதாக்கள் பல நமது நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படும். அரசியல் காரணங்களுக்காக அது அப்படியே கிடப்பில் போடப்படும். அப்படி, கிடப்பில் போடப்பட்டதொரு மசோதாதான், மகளிர் இடஒதுக்கீடு மசோதா. 

சட்டமன்றம், நாடாளுமன்றத்தில் உள்ள இடங்களில் 33% ஒதுக்கீட்டை பெண்களுக்கு அளிக்க வழிவகுக்கும் இம்மசோதா 1996லிருந்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு வருகிறது. 2010ம் ஆண்டு ராஜ்யசபாவில்கூட நிறைவேற்றப்பட்டது. ஆனாலும், இரு அவைகளிலும் நிறைவேற்றப்படாததால் இச்சட்டம் இன்னும் நடைமுறைக்கு வரவில்லை. 33% சதவீத ஒதுக்கீட்டுக்குள் ”பிற பிற்பட்ட சமுதாயத்தினருக்கு” உள் ஒதுக்கீடு கொடுக்கவேண்டும் என்ற சர்ச்சையின் காரணமாக(முலாயம் சிங் யாதவ், லல்லுபிரசாத் போன்றோர்) இச்சட்டம் இன்னும் நிறைவேற்றப்படாமல் இருக்கிறது என்பது ஒரு காரணமாகச் சொல்லப்படுகிறது. இந்த உள் ஒதுக்கீடு கொடுக்கவில்லை என்றால், பிற்படுத்தப்பட்டோருக்கு உரிய பிரதிநிதித்துவம் கிடைக்காது என்பது இவர்கள் முன்வைக்கும் வாதம்.

 1992ல் நிறைவேற்றப்பட்ட பஞ்சாயத்து ராஜ் சட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 33% சதவீதம் ஒதுக்கீடு அளிக்கப்பட்டது. இதை, எதிர்ப்பின்றி ஏற்றுக்கொண்ட அரசியல் கட்சிகள் சட்டமன்றம், நாடாளுமன்றத்தில் 33% ஒதுக்கீடு தர எதிர்ப்பு தெரிவிப்பது குறிப்பிடத்தக்கது. (தமிழக அரசு ஒருபடி மேலேபோய் உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு இருந்த 33% ஒதுக்கீட்டை 50% என உயர்த்தியது, மிகவும் பாராட்டுதலுக்குரியது(2016ல் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது அறிவித்தது)

இந்த நேரத்தில் அனைத்து அரசியல் கட்சிகளையும் நோக்கி ஒரு கேள்வி எழுப்புவது அவசியமாகிறது. பெண்கள் இடஒதுக்கீடு சட்டம் நடைமுறைக்கு வருகிறதோ இல்லையோ, தேர்தலின்போது அக்கட்சிகள் தானே முன்வந்து 33% அல்லது 50% தொகுதிகளில் பெண்களை வேட்பாளர்களாக அறிவிப்பதற்கு என்ன தடை இருக்கிறது? யார் அவர்களைத் தடுக்கிறார்கள்? எது அவர்களைத் தடுக்கிறது..? ஆக, அரசியல் கட்சிகள் மனம் வைத்தால், சட்டம் செயல்பாட்டுக்கு வராமலேயே மேலும் மிக அதிகமான பெண்களை சட்டமன்றத்திலோ, நாடாளுமன்றத்திலோ நுழையச் செய்யமுடியும். இதை ஒருகட்சி செய்யமுற்பட்டால், அது ஊடகங்களில் செய்தியாகுமானால், அரசியல் நிர்பந்தம் காரணமாக பிற கட்சிகளும் இதைச் செய்யமுற்படும். பெண்களின் வாக்குகளைக் கவர சிறப்புத் திட்டங்கள் அறிவிக்கும் கட்சிகள், பெண்களுக்கு சட்டமன்றம்-நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் பெற்றுத்தரும்  இம்முயற்சியை ஏன் முன்னெடுப்பதில்லை…?

மகளிர் இடஒதுக்கீடு என்பது பெண்களின் முன்னேற்றத்திற்கான ஒட்டுமொத்தத் தீர்வல்ல என்பதைப் புரிந்துகொள்வோம். அதே சமயத்தில், சமூக மாற்றத்திற்கான கொள்கை முடிவெடுப்பதில் அவர்களின் பங்கேற்கை அதிகரிக்கும் ஒரு படிக்கல் இது “என்பதையும்” புரிந்துகொள்வோம். தேர்ந்தெடுக்கப்பட்ட பெண்களைப் பொம்மைகளாக வைத்துக்கொண்டு ஆண்கள் பின்னிருந்து ஆட்சி செலுத்துவார்கள் என்பது இவ்விவகாரத்தில் தொடர்ந்து முன்வைக்கப்படும் வாதம். உள்ளாட்சி அமைப்புகளில் கொடுக்கப்பட்ட பெண்கள் ஒதுக்கீடு இப்படிப் பயன்படுத்தப்படுவதை ஆங்காங்கே பார்க்கிறோம். அதே சமயத்தில், ஒதுக்கீடு கொடுத்ததால், கூடுதல் வாய்ப்பு பெற்று சாதித்த ஏராளமான பெண் பஞ்சாயத்துத் தலைவர்களையும் தமிழகம் கண்டுள்ளது என்பதையும் மறந்துவிடக்கூடாது. முதலில் பெண்களுக்கு உரிய வாய்ப்பைத் தர மறுப்பது, அவர்களின் உரிமையைத் தட்டிப்பறிக்கும் செயல் என்று கருதி சட்டத்தைக் கொண்டுவருவோம். அதிலுள்ள செயல்பாட்டுச் சிக்கலைப் பின்னர் பார்த்துக்கொள்வோம்.

அர்த்தநாரீஸ்வரர் என்று, பெண்ணுக்கு இறைவனின் உடலிலேயே பாதி(50%) ஒதுக்கீடு கொடுத்த சமூகம், ஜனநாயகத்தின் அடிநாதமான சட்டமன்றத்தில்-நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 33%  ஒதுக்கீடு தருவதற்கான முழுமுயற்சியில் இறங்கவில்லை என்பது முரணாக இல்லையா.. ?

பெண்களுக்கு சட்டமன்றத்தில், நாடாளுமன்றத்தில் 33% ஒதுக்கீடு என்பது மத்திய அரசால்(நாடாளுமன்றத்தில்) கொண்டுவரப்படவேண்டிய ஒரு சட்டம். இன்னும் சில மாதங்களில் நாடாளுமன்றத்திற்கு தேர்தல் வரவிருக்கிறது. பிரதான தேசியக் கட்சிகளான காங்கிரஸ்,பா.ஜ.க. ஆகிய இருகட்சிகளுமே, இதனை நிறைவேற்றுவோம் என்றே கடந்த தேர்தல்களின்போது உறுதியளித்துள்ளன.

2004லிருந்து 10 ஆண்டுகள் காங்கிரஸ் ஆண்டது. 2014ல் துவங்கிய பா.ஜ.க.ஆட்சிக்காலம் முடியப்போகிறது. ஆனாலும் இச்சட்டம் இன்னும் நிறைவேற்றப்படவில்லை. 22 ஆண்டுகள் கிடப்பில் போடப்பட்ட இந்தச் சட்டம், வருகிற நாடாளுமன்றத் தேர்தலின்போதாவது முக்கியத்துவம் பெற்று, ஆட்சியமைக்கப்போகும் கட்சியால் செயல்முறைக்குக் கொண்டுவரப்படுமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம். !!

 “… எட்டு மறிவினில் ஆணுக்கிங்கே பெண்
இளைப்பில்லை காணென்று கும்மியடி”


என்ற பாரதியின் புரிதல் ஒட்டுமொத்த சமூகத்திற்கும் எப்போது வரும்…?


கருத்து பகிர: sentharu@gmail.com, 87545-80274







Monday, 19 November 2018

Rafale : Ambani Link - ரபேல் ஒப்பந்தம் - அம்பானி -


#Anil_AMBANI_invest_in_FRENCH_FILM_JULIE_GAYET
மகராசி ஜீலி கேயட் !! “Tout là-haut” போல நிறையப் படம் எடுக்க வாழ்த்துக்கள் !!
ஏன், எதுக்குனு கேப்பீங்க..!!
இந்த ஜீலி கேயட் மகராசி மட்டும் “Tout là-haut” படத்தை எடுக்காம இருந்திருந்தா...
நம்ம கலாரசிகர் அனில் அம்பானி அந்தப் படத்துக்கு 1.6மில்லியன் ஈரோ முதலீடு பண்ணியது நமக்கு எப்படித் தெரியவரும் ??
இப்ப ஜீலி கேயட், யாருன்னு கேப்பீங்க..!!
பிரான்ஸ் நாட்ல இருக்கிற ஒரு முக்கியப் புள்ளியோட பெண் தோழி..??
அது, யாரு அந்த முக்கியப் புள்ளினு கேப்பீங்க..!!
வேற, யாருமில்ல. அந்த நாட்டு முன்னாள் அதிபர் ஹோலண்டேதான்..
அது யாரு ஹோலண்டேனு கேட்பீங்க..!!
நம்ம பிரதமர் மோடி, பிரான்ஸ் போய் அந்த நாட்டு அதிபரோட ரபேல் ஒப்பந்தம் போட்டுவந்தாரே... அதே, அதிபர் ஹோலண்டேதான்..
இப்ப கடைசிக் கேள்வி..
மோடியும், ஹோலண்டேயும் ஒப்பந்தம் போடுகிறார்கள். அதிபர் ஹோலண்டேயின் அதிகாரப்பூர்வ இல்லமான “எலிசி பேலஸில்” அதிபர் ஹோலண்டேவுடன் வசித்த பெண் தோழி ஜீலி கேயட் தயாரித்த படத்தில் நம்ம ஊரு அனில் அம்பானி எதுக்கு 1.6. மில்லியன் யூரோ பணத்தை முதலீடு செய்தார்..??
இந்தக் கேள்விக்கு எனக்கு பதில் தெரியாது..
தெரிஞ்சவங்க சொல்லுங்க, நான் தெரிஞ்சுக்கிறேன்..!!

14-11-2018

"கஜா புயலும் - 20 தொகுதி இடைத்தேர்தலும்”

"கஜா புயலும் - 20 தொகுதி இடைத்தேர்தலும்” - அரசியல் கட்சிகளின் பண்பு-அடுத்த கட்ட நடவடிக்கைகள்-நீர்நிலை ஆக்கிரமிப்பு அகற்றுதல்-தூர்வாருதலின் முக்கியத்துவம்:
1. புயலின் போதும், புயலுக்குப் பிறகும் ”மக்கள் நிம்மதியாக உறங்கவேண்டும் என்பதற்காக உறங்காமல் செயல்பட்ட” தமிழக அரசுக்கு பாராட்டுக்கள். இதுபோல் பொறுப்போடும்,விழிப்போடும், திட்டமிடுதலோடும் ஒவ்வொரு பொதுப்பிரச்னைகளையும் ஆளுங்கட்சி அணுகினால் சிறப்பாக இருக்கும். வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை,காவல்துறை,சுகாதாரத்துறை,மின்சாரத்துறை,வானியல் அறிவிப்பு மையம் என அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.
2. புயலை எதிர்கொள்ள தமிழக அரசு எடுத்த முன்னெசரிக்கை நடவடிக்கைகளுக்கு திமுக,பா.ம.க,காங்கிரஸ்,பா.ஜ.க,மார்க்சிஸ்ட்,மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகள் நேரடியாகவோ, மறைமுகமாகவோ தமிழக அரசுக்குப் பாராட்டு தெரிவித்தது தமிழகம் அதிகம் கண்டிராத அரசியல் பண்பு, நாகரீகம். அனைத்துப் பிரச்னைகளிலும் இப் பண்பு தொடரட்டும்.
3. பேரிடரின் நிலையில் மூன்று R சொல்வார்கள். Rescue,Relief,Rehabilitation( மீட்பு, நிவாரணம்,மறுவாழ்வு). இதில் தொடக்கநிலையில் தமிழக அரசு சிறப்பாகச் செயல்பட்டிருப்பதை பாராட்டவேண்டும். அதேபோல், நிவாரணம், மறுவாழ்வு என அடுத்த இரு முக்கிய கட்டங்களிலும் இதோபோல் செயல்படவேண்டும் அரசு. செய்யுமா ? புயலின் மொழியில் சொல்லவேண்டுமானால், தலைப்பகுதியை முடிந்தவரை நன்றாக சமாளித்துவிட்டோம், கண் பகுதி-வால்பகுதியை எப்படி சமாளிக்கப்போகிறோம் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.
4. மழை என்றால் பாதிப்பு என்று மத்திய அரசிடம் நிவாரணம் கேட்டோம்(2015ல் 1940கோடி). அடுத்த ஆண்டே வரலாறு காணாத வறட்சி என்று நிவாரணம் கேட்டோம்(2016ல் 1700கோடி). காரணம்..? ஏரி,குளம், நீர்நிலைகள், நீர்வழித்தடங்கள் ஆக்கிரமிப்பு, தூர்வாராமை, ஊழல்... மழைநீர் வடிகால் முறையாக அமைக்கப்படாமை, அதில் நடைபெறும் ஊழல். இதுபோன்ற நீண்டகாலமாக “சீரழிக்கப்பட்டு” , கண்டுகொள்ளாமல் இருக்கும் விஷயங்களிலும் அரசு கவனம் செலுத்தவேண்டும். செய்யுமா அரசு..?
5. தமிழகத்தில் 10 தொகுதியோ, 20 தொகுதியோ அடிக்கடி காலியா இருந்து, இடைத்தேர்தல் எப்போது வேண்டுமானாலும் வரலாம் என்ற ”கழுத்துக்கு மேல்” கத்தி தொங்கும் நிலை எப்போதும் இருந்தால், ஆளுங்கட்சியானது “கஜா” புயலை எதிர்கொண்டதுபோல் பொறுப்போடும், விழிப்போடும், சுறுசுறுப்போடும் செயல்படுமோ..?

செக்கை இழுத்தபோது,..சிறை அறையில் வாடியபோது .. வ.உ.சி

இந்த செக்கை இழுத்தபோது, இந்த சிறை அறையில் வாடியபோது ..வ.உ.சி

நூறாண்டுகளுக்கு முன்பு சொந்தமாக கப்பல் ஓட்டியவர், பிரபல வழக்கறிஞர்...  விடுதலைப் போராட்டத்திற்கு, தமிழ் இலக்கியத்திற்கு மாபெரும் தொண்டாற்றிய வ.உ.சி, கடைசிக் காலத்தில் மளிகைக் கடை நடத்தியும், மண்ணென்ணெய் கடை நடத்தியும் வறுமையின் பிடியில் இருந்தபோது இறந்துபோனார்.  இன்று அவரின் வாரிசுகள் கல்லூரிக் கட்டணம் கட்ட வழியில்லாமல் போராடி  பிறகு வங்கிக்கடன் வாங்குகிறார்கள்.. 

கிட்டத்தட்ட 100 ஆண்டுகளுக்கு முன்பு(1908-1912) ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு கோவை சிறையில் இந்த செக்கை இழுத்தபோது,  சிறையில் இந்த அறையில் வாடியபோது விடுதலையான இந்தியா, தமிழகம் எப்படியெல்லாம் இருக்கும் என்று எத்தனை கனவு கண்டிருப்பார் வ.உ.சி...?? 
ஊழலும், சுயநலமும் தங்கள் இருகண்கள் என ஆளும் இன்றைய ஆட்சியாளர்களைக்  கண்டால், இதற்கா இத்தனை பேர் ரத்தம் சிந்தினோம், வாழ்க்கை இழந்தோம், உயிர் இழந்தோம் என்ற கேள்வி அவர்கள் மனதை முள்ளாய்க் குத்திக் கிளரும்... 

(நவ 18, வ.உ.சி. நினைவு நாள்)

வ.உ.சி. பற்றி தமிழில் படிக்க:
http://www.itstamil.com/v-o-chidambaram-pillai.html





Tuesday, 13 November 2018

Rafale Deal: ரபேல் விமான விவகாரம்.. காங்கிரஸ்-பா.ஜ.க.?? யார்... என்ன செய்தார்கள்..?

ரபேல் விமான விவகாரம்: காங்கிரஸ்? பா.ஜ.க?
யார்... என்ன செய்தார்கள்..?
- செந்தில் ஆறுமுகம்,13-11-2018

காங்கிரஸ்:
2007ல் ராணுவத்திற்கு 126 போர்விமானங்கள் வாங்க டெண்டர் கோரியது இந்திய அரசு. டெண்டரில் பங்கேற்ற 6 வெளிநாட்டு நிறுவனங்களில் குறைந்தவிலை கோரிய பிரான்ஸின் டசால்ட் நிறுவனம் வென்றது( ஜனவரி 2012ல். ஆம், இது நடப்பதற்குள் 5 ஆண்டு ஓடிவிட்டது). 18விமானங்கள் பறக்கும் நிலையில் டசால்ட் நிறுவனத்தால் கொடுக்கப்படும்; 108 விமானங்கள் இந்திய அரசின் HAL( Hindustan Aeronautics Limited) நிறுவனத்தால் தயாரிக்கப்படும் என்று ஒப்பந்தம் முன்வைக்கப்பட்டது. ஆனால், இது இறுதியாகவில்லை. அதற்குள் 2014 நாடாளுமன்றத் தேர்தல் வந்துவிட்டது. விமான கொள்முதல் தொங்கலில் விடப்பட்டது !! 2007ல் ஆரம்பித்த விமான கொள்முதல் விவகாரத்தை( 7 ஆண்டுகள் இழுத்தடித்த பின்னரும்) விரைவாக முடித்து, இந்திய ராணுவத்திற்கு மிகவும் தேவையான போர்விமானங்களைப் பெற்றுத்தராத காங்கிரஸ் ஒருபக்கம். ( அப்போதும் ரிலையன்ஸ்: ஜனவரி 2012ல் 126 விமானங்களைத் தயாரித்துக்கொடுக்க தேர்வுசெய்யப்பட்ட டசால்ட் நிறுவனத்துடன், பிப்ரவரி 2012ல் ரிலையன்ஸ் நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டுக்கொண்டது )

பா.ஜ.க:
(இந்தியாவின்) எதிரிகளின் போர் விமான பலம் கூடிவிட்டது. ( "...our adversaries inducted modern aircraft... They acquired better capability air-to-air-missiles.....They inducted 400 fighter aircraft...பக்கம்6: உச்சநீதிமன்றத்தில் ரபேல் விமான கொள்முதல் விவரம் குறித்து நேற்று மத்திய அரசு தாக்கல் செய்த ஆவணத்திலிருந்து) நம்முடைய போர்விமான பலம் குறைவாக உள்ளது. இப்போது “...critical operational necessity" உள்ளது என்று கூறி, பிரதமர் மோடி அவசர-அவசரமாக பிரான்ஸ் நாட்டோடு 10-04-2015 அன்று ஒப்பந்தம் போட்டார். ( ஒப்பந்தம் என்ன..? பறக்கத் தயாராக இருக்கும் 36 போர்விமானங்களை 67 மாதங்களுக்குள் தரவேண்டும் என்றும். இதில் முதல் விமானம் ஒப்பந்தம் இறுதியானதிலிருந்து 36 மாதத்தில் கிடைக்கும் என்றும் ஒப்பந்தம் முடிவானது). அதன்படி, 2019லிருந்து இந்தியாவிற்கு ரபேல் போர் விமானங்கள் கிடைக்கத் துவங்கிவிடும். பிரதமர் மோடி பிரான்ஸோடு செய்துகொண்ட ஒப்பந்தத்தின் போது, உரிய நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை.. விலை நிர்ணயத்தில் முறைகேடு, இது பாதுகாப்புத்துறை அமைச்சர், வெளியுறவுத்துறை அதிகாரி போன்றவர்களுக்கே தெரியுமா என்பதே சந்தேகம் !! ரிலையன்ஸ்க்கு சாதகமாக செயல்பட்டார் !! ஊழல் நடந்துள்ளது என்பது குற்றச்சாட்டு. ( இப்போதும் ரிலையன்ஸ்: 2016 செப்டம்பரில் இந்தியா-பிரான்ஸ் இடையே ஒப்பந்தம் இறுதியாகிறது. 2016 அக்டோபரில் ரிலையன்ஸ்-டசால்ட் நிறுவனத்துடன் புரிந்துணர்வு கையெழுத்தாகிறது.)
இது பா.ஜ.க. பக்கம்.

புரிந்துகொள்வதற்கு மிகவும் கடினமான, முழுமையான தகவல்-ஆவணங்கள் கிடைக்க வாய்ப்பில்லாத இந்த விவகாரத்தில் பா.ஜ.க - காங்கிரஸ் என யார் பக்கம் நியாயம் இருக்கிறது...?? உங்கள் கருத்துக்களைப் பகிருங்கள்..!!

அடுத்த பதிவில் இன்னும் கூடுதல் விவரங்களோடு, விரிவாக எழுத முயற்சிக்கிறேன்..!!

-செந்தில் ஆறுமுகம்,
13-11-2018,
கருத்து பகிர: sentharu@gmail.com, 87545-80274

Saturday, 10 November 2018

அனைத்து வீட்டிற்கும் ”100 யூனிட் மின்சாரம் -இலவசம்” அவசியமா?

1.85கோடி குடும்பத்திற்கும் ”100 யூனிட் மின்சாரம் -இலவசம்” அவசியமா?
 -செந்தில் ஆறுமுகம்

சமீபகாலத்தில் கொடுக்கப்பட்ட ஒரு அபத்தமான, ஆபத்தான இலவசம் என்பது “100 யூனிட் மின்சாரம்” அனைத்துக் குடும்பங்களுக்கும் இலவசம் என்பது. 2016 சட்டமன்றத்தேர்தல் அறிக்கையில், மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்களால் அறிவிக்கப்பட்ட திட்டம் இது. தொடங்கப்பட்ட ஆண்டாகிய 2016ல், இந்த இலவசத்திற்காக அரசு ஒதுக்கிய தொகை 1609கோடி(ஓராண்டிற்கு). மிக்சி-பேன் - டிவி போன்றவை எல்லாம் ஒருதடவை ஆகும்(One time Expense) செலவு. இந்த 100 யூனிட் மின்சாரம் ஆண்டுதோறும் தொடரும் செலவு(Recurring Expense). மின்சார உற்பத்தி செலவு அதிகமாக, அதிகமாக இந்த 1609கோடி என்பது 2000கோடி,3000கோடி என அதிகரித்துக்கொண்டே செல்லும்.

வீட்டு மின்சாரத்திற்கு இதுபோன்ற இலவசங்கள் கொடுப்பது அவசியமல்ல. அதுவும், ஏசி வைத்திருப்போர் வீடுகள் உட்பட அனைத்து வீடுகளுக்கும் இதுகொடுக்கப்பட்டு வருகிறது எவ்வளவு பெரிய அபத்தம்.

இருந்தபோதும், மிகவும் ஏழையாக இருப்பவர்களுக்கு இத்திட்டம் உதவியாக இருக்கும் என்று அரசு நினைத்தால் “பரம ஏழை” என்று அரசாங்கத்தின் கணக்கெடுப்பில் உள்ள 18லட்சம்பேருக்கு(அந்தியோதயா ரேசன் அட்டை வைத்திருக்கும் 18,62,615 பேருக்கு. மொத்த ரேசன் அட்டை: 1.85கோடி) மட்டும் கொடுத்தால் கூடப்போதுமானது. ( முதல்வர் கருணாநிதி ஆட்சிக்காலத்தில், கட்டணமில்லாமல் குடிசைகளில் ஒரு பல்பு மட்டும் மாட்டிக்கொள்ள அனுமதி தரப்பட்டிருந்தது. அதற்கு “ஒத்த லைட்” திட்டம்” என்ற பெயர் இருந்தது. இலவச டிவி கொடுக்க ஆரம்பித்தபிறகு இத்திட்டம் படிப்படியாக மாற்றப்பட்டு, அனைத்து வீடுகளுக்கும் முழுமையான மின்சார இணைப்பு வழங்கப்பட்டது. ரூ.1200 மின் இணைப்புக் கட்டணம், மாதந்தோறும் ரூ.100கட்டுவதற்கு சலுகை அளிக்கப்பட்டது..)

அடுத்து வரும் எந்த ஆட்சியாளாருக்காவது இந்த 100யூனிட் மின்சார இலவசத்திட்டத்தை மாற்றுவதற்கு தைரியம் வருமா? ஓட்டுவங்கிக்குப் பயந்து திட்டத்தை அப்படியே தொடர்வதற்கே விரும்புவார்கள் என்பதே எதார்த்த நிலை..!!
ஓட்டுவங்கியைக் கவர பட்ஜெட்டுக்கு வேட்டுவைக்கும் திட்டங்களை அறிவித்துவிட்டு... பிறகு அந்த ஓட்டுவங்கியின் எதிர்ப்பைச் சம்பாதிக்க நேரிடும் என்று “அபத்தமான” திட்டங்களைத் தொடரும்போக்கு முடிவுக்குவரும் காலம் கண்ணில் தெரியவில்லை..!!!

- செந்தில் ஆறுமுகம்,
11-11-2018,  
கருத்துப்பகிர: 87545-80274 ,sentharu@gmail.com

Friday, 9 November 2018

இலங்கை & தமிழக அரசியல்: “உள்ளாட்சித் தேர்தலில் கண்டமா..?” - செந்தில் ஆறுமுகம்

”நாடாளுமன்றக் கலைப்பிற்குக் காரணம் உள்ளாட்சித் தேர்தல் தோல்வியா?”   - செந்தில் ஆறுமுகம்

தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தினா, “உள்ள ஆட்சிக்கும்” ஆபத்து வந்திரும்னு நினைக்கிறது அதிமுக..!! அது ஒருவகையில் உண்மை என்று நிரூபித்துள்ளது இலங்கை நாடாளுமன்ற கலைப்பு.. எப்படி ?
இலங்கை நாடாளுமன்றக் கலைப்பிற்குப் பலகாரணங்கள் இருந்தாலும், கடந்த பிப்ரவரியில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் அதிர்பர் சிறிசேனாவின் கட்சியும் பிரதமர் விக்கிரமசிங்கேவின் கட்சியும் ராஜபக்சேவின் கட்சியிடம் படுதோல்வி அடைந்ததும் ஒரு முக்கியக் காரணம் என்றே கருதுகிறேன்.!!
பிப்ரவரியில் நடந்த இலங்கை உள்ளாட்சித் தேர்தலில் ராஜபட்சேவின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனா(SLPP) கட்சி 340க்கு 225 இடங்களை வென்று அசுரவெற்றி பெற்றது. அதாவது ஆட்சிப்பொறுப்பில் உள்ள சிறிசேனா,விக்கிரமசிங்கேவின் கட்சிகளை எதிர்த்து நின்று !!
உள்ளாட்சித் தேர்தலில் ராஜபட்சே வென்ற 11-02-2018 அன்றே, “... மக்களின் குரலின்படி ஆட்சி மாற்றம் அவசியமாகிறது” என்று பிப்ரவரி 11 அன்று டுவீட் செய்தார். 9 மாதங்களில் அது நடந்துவிட்டது. !!( Thank you to all who supported the vision of the #SriLanka Podujana Peramuna at the #LGPolls2018. Your voices have been heard. It’s clear that our country needs a change.,Rajapaksa).
ஜெயிக்கும் குதிரையில்தானே அனைவரும் பணம் கட்டுவார்கள். 2015ன் பழைய பகையை மறப்போம், வென்ற குதிரையான உங்களையே பிரதமராக்குகிறேன், என்று முடிவெடுத்தார் சிறிசேனா.
பலசாலியான எதிரி என்றால் ஒன்று அவனை எதிர்த்து நின்று வெல்லவேண்டும், இது முதல் வகை;  இல்லை பலசாலியான அவனை நம் பக்கத்தில் சேர்த்துக்கொள்ள வேண்டும். இது இரண்டாம் வகை.
2015 நாடாளுமன்றத் தேர்தலில் சிறிசேனா, ராஜபக்சேவை எதிர்த்து நின்று வென்றது, முதல்வகையிலானது.
இப்போது, 2018ல் சிறிசேனா, ராஜபக்சேவை தம்பக்கத்தில் சேர்க்க பிரதமராக்கியது, நாடாளுமன்றத்தைக் கலைத்தது இரண்டாம் வகையிலானது..!!
ஜெயிக்கணும்..ஜெயிக்கணும்...ஜெயிக்கணும்...
அதுக்கு என்ன வேணாலும் செய்..!!
எதை வேண்டுமானாலும் செய்..!!
எப்படி வேண்டுமானாலும் செய்..!!
என்ற இன்றைய அரசியல் அடிப்படைப் பாடத்தை “சிறப்பாகப்” படித்தவராக இருக்கிறார் “சிறிசேனா”.  பாதிக்கப்படுவதோ “ஸ்ரீலங்கா”. !!

49-P: கள்ள ஓட்டால் முதல்வர் வேட்பாளர் தோற்ற தேர்தல் வரலாறு- உச்ச நீதிமன்ற தீர்ப்பு என்ன ?

வேட்பாளரின் மனைவி போட்ட கள்ள ஓட்டு... ஒரு வாக்கு வித்தியாசத்தில் MLA வெற்றி...49-P வாக்குகளைச் சேர்த்தபோது நடந்தது என்ன...? 

49-P: கள்ள ஓட்டால் முதல்வர் வேட்பாளர் தோற்ற தேர்தல் வரலாறு...

-செந்தில் ஆறுமுகம்,

சர்க்கார் படத்தின் காரணமாககள்ள ஓட்டுமற்றும் அது தொடர்பான “49(P)" தேர்தல் விதிமுறை குறித்து பொதுவெளியில் விவாதம் நடக்கிறது. படத்தில் “ஒரு ஓட்டின்” முக்கியத்துவத்தைப் பற்றி விரிவாக விவாதிக்கப்படும். உண்மையிலேயே, “ஒரு ஓட்டு” வித்தியாசம் ஒரு சட்டமன்றத் தேர்தலில் பலத்த அதிர்வை ஏற்படுத்திய  பழைய உண்மை நிகழ்வு ஒன்று உள்ளது.  அதனைப் பகிர்ந்தால், இந்த 49-P விதிமுறை குறித்தான சட்ட விளக்கங்கள் மக்களிடம்  சென்று சேரும் என்ற நோக்கில் இதை எழுதுகிறேன்.

ஒருவரின் ஓட்டை மற்றொருவர் போட்டுவிட்டால், அது குறித்தான வழக்கு நீதிமன்றங்களுக்குச் செல்லும்போது தீர்ப்பு எப்படி வழங்கப்படுகிறது என்பதைப் புரிந்துகொள்ளவும் இந்தப்  பதிவு,நிகழ்வு உதவியாக இருக்கும்.

ஆண்டு 2008. ராஜஸ்தான் மாநில சட்டமன்றத் தேர்தல். அம்மாநிலத்தின் காங்கிரஸ் கட்சித் தலைவரும், வெற்றி பெற்றால் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்புப் பெற்றவருமான சி.பி.ஜோஷியும், பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர் கல்யாண்சிங் சவுகானும்நாத்துவாராசட்டமன்றத் தொகுதியில் போட்டியிடுகிறார்கள். 04-12-2008 அன்று தேர்தல் நடந்தது. 4 நாட்கள் கடந்து தேர்தல் முடிவுகள் வெளியானது.

200 தொகுதிகளைக் கொண்ட ராஜஸ்தான் மாநிலத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டபோதுநாத்துவாராதொகுதியின் முடிவு காங்கிரசிற்கு அதிர்ச்சி அளிப்பதாக இருந்தது..!! இந்திய தேர்தல் வரலாற்றில் இது முக்கியமானதொரு முடிவாக இருக்கப்போகிறது என்பது அப்போது போட்டியிட்ட யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

அந்தத் தேர்தலில்,  நாத்துவாராதொகுதியில்
காங்கிரசின் ஜோஷி பெற்ற ஓட்டுக்கள்: ”62215”
பி.ஜே.பி.யின் கல்யாண் சிங் பெற்ற ஓட்டுக்கள்: ”62216”

ஆம், ஒரு ஓட்டு வித்தியாசத்தில் பி.ஜே.பி.வேட்பாளரான கல்யாண் சிங் வெற்றிபெற்றவராக அறிவிக்கப்பட்டார். ஓட்டு எண்ணிக்கையை மீண்டும் சரிபார்க்கச் சொல்கிறார் ஜோஷி.   தபால் வாக்குகளை எண்ணிப் பார்த்தாயிற்று, ஓட்டு எந்திரங்களில் மீண்டும் ஒருமுறை வாக்குகளை சரிபார்த்தாயிற்று. ஒரு ஓட்டு வித்தியாசம்தான் என்பது உறுதி செய்யப்பட்டது

 மாநில காங்கிரஸ் தலைவர், முதல்வராவதற்கு வாய்ப்புள்ள வேட்பாளர் என்ற முறையில் இருக்கும் காங்கிரசின் ஜோஷி அவர்கள் ஒரு ஓட்டு வித்தியாசத்தில் தோற்றது உறுதி செய்யப்பட்டு, 08-12-2008 அன்று தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டது. ( 1980,1985,1998,2003 என ஏற்கனவே இந்த சட்டமன்றத் தொகுதியில் வென்றவர் ஜோஷி என்பது குறிப்பிடத்தக்கது.)

இந்த உண்மைச் சம்பவத்தில் 49(P) எனப்படும் பிரிவு இப்போது விவாதத்திற்கு வருகிறது.  Section 49P in The Conduct of Elections Rules, 1961 ன்படி தனது ஓட்டை யாராவது போட்டிருந்தால், தனது அடையாளத்தைக் நிரூபித்து, ஓட்டிற்குச் சொந்தக்காரரான உண்மையான நபர் வாக்களிக்கலாம். அப்படி சிலர், “நாத்துவாராதொகுதியில் வாக்களித்திருந்தனர். இப்படிப் போடப்பட்ட ஓட்டுக்களை “Tendered Votes" என்று அழைக்கப்படும்.

வெற்றி பெற்ற வேட்பாளருக்கும், அவருக்கு அடுத்தபடியாக வந்த 
வாக்காளருக்கும் உள்ள வாக்கு வித்தியாசம் மிகவும் குறைவாக உள்ள 
சமயத்தில் மட்டுமே, அதுவும் உயர்நீதிமன்றத்தின் உத்தரவின் 
அடிப்படையில்தான் இவ்வாக்குகள் எண்ணப்படும். ஆகவே, தோற்றவராக 
அறிவிக்கப்பட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஜோஷி, இந்த Tendered Votes(49-P)
 எண்ணப்படவேண்டும் என்று கோரி ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில்
(ஜோத்பூர்) 16-01-2009ல் வழக்கு தொடுக்கிறார். (இது எண்ணப்பட்டால் தனக்கு 
சாதகமாக தீர்ப்பு மாற வாய்ப்பிருக்கும் என்று கருதி..). 
இவ்வழக்கில்(Election Petition No. 1/2009) 
தன்னை எதிர்த்துப் போட்டியிட்டு, வென்றவராக அறிவிக்கப்பட்ட
 பி.ஜே.பி.வேட்பாளர் கல்யாண் சிங்கின் மனைவி கல்பனா குன்வர் 
இரண்டு ஓட்டுக்கள்(வாக்குச்சாவடி எண்39,40ல் வரிசை எண் 484,727) போட்டார்
என்ற அதிர்ச்சிக்குரிய குற்றச்சாட்டையும் வழக்கில் சேர்த்திருந்தார்
 
வழக்கம்போல், ஆண்டுக்கணக்கில்  விவாதிக்கப்பட்ட இந்த வழக்கில் நீதிபதி. தினேஷ் மகேஷ்வரி அவர்கள் 31-08-2012ல் தீர்ப்பு வழங்கினார்

ராஜஸ்தான் உயர்நீதி மன்றம் வழங்கிய தீர்ப்பின் 4 முக்கிய அம்சங்கள்:
1. “நாத்துவாராதொகுதியில் பி.ஜே.பி வேட்பாளர் கல்யாண் சிங்கின் வெற்றி செல்லாது, ரத்து செய்யப்படுகிறது (void) 

2.
கள்ள ஓட்டு போட்ட பி.ஜே.பி.வேட்பாளரின் மனைவி கல்பனா குன்வர் மற்றும் வேறு இருவர் மீது கிரிமினல் வழக்கு பதிய வேண்டும்(கல்பனா போட்ட 2 ஓட்டுக்களும் ரத்து செய்யப்பட்டது. அதேபோல்வேறு இருவர் போட்ட கள்ள ஓட்டுக்களும் ரத்து செய்யப்பட்டது.) 

3.
கள்ள ஓட்டு போட்டு தேர்தல் முறைகேடு செய்த பி.ஜே.பி. வேட்பாளர் கல்யாண் சிங்,   காங்கிரஸ் வேட்பாளர் ஜோஷியின் வழக்கு செலவிற்காக ரூ.51,000/- கொடுக்க வேண்டும்
.
4. பி.ஜே.பி. வேட்பாளர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்கு வாய்ப்பளிக்கும் விதமாக இத்தீர்ப்பு 30 நாட்களுக்கு நிறுத்திவைக்கப்படுகிறது.

எதிர்பார்த்தது போல் பி.ஜே.பி. வேட்பாளர் கல்யாண் சிங் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். 49(P) விதிமுறையின்படி வாக்களித்தவர்களின் (”Tendered Votes" )எண்ணப்படவேண்டும் என்று கேட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஜோஷியின் கோரிக்கையை ஏற்ற உச்சநீதிமன்றம், அந்த வாக்குகளை எண்ண 04-03-2013ல் உத்தரவிட்டது.  

பி.ஜே.பி.வேட்பாளரின் மனைவி போட்ட 2 ஓட்டுக்களும் கள்ள ஓட்டாக கருதப்பட்டு, அதை கணக்கில் எடுத்துக்கொள்ளக்கூடாது என்று உத்தரவிட்டிருந்தது உச்சநீதிமன்றம். அதேபோல் வேறு இருவர் போட்ட கள்ள ஓட்டையும் கழித்துவிட்டு - 49(P) ல் பதிவான வாக்குகளை எண்ணி முடித்தபோது ஒரு ஆச்சர்யம் காத்திருந்தது. !

பி.ஜே.பி., காங்கிரஸ் வேட்பாளர்கள் இருவரும் சம வாக்குகளைப் பெற்றிருந்தனர் !! மீண்டும் குழப்பம் !!

இருவரும் சமவாக்குகள் பெற்றால் குலுக்கல் முறையில்தான் வெற்றியாளர் யார் என்பது முடிவு செய்யப்படவேண்டும் என்று காங்கிரஸ் வேட்பாளர் ஜோஷி சார்பில் வாதிடப்பட்டது

12-4-2013ல் இவ்விசித்திரமான வழக்கிற்கு உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.(தேர்தல் நடந்தது டிசம்பர் 2008 என்பதை நினைவில் கொள்க!!). 2008ல் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றத்தின் பதவிக்காலமே முடிவடையும் தருவாயில் உள்ளநிலை, மற்றும் ஜோஷி-கல்யாண்சிங் இருவருமே சம வாக்குகள் பெற்றுள்ள நிலை இவற்றைக் கருத்தில் கொண்டுநாத்துவாராதொகுதியின் தேர்தல் வெற்றியை செல்லாது என அறிவிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் இறுதித் தீர்ப்பளித்தது. பி.ஜே.பி.வேட்பாளர் கல்யாண்சிங்கே சட்டமன்ற உறுப்பினராகத் தொடர்வார் என்றும் அறிவித்தது.

ஆக,  2008ல் தேர்தல். 2009ல் உயர்நீதிமன்றத்தில் வழக்கு. 2012ல் உயர்நீதிமன்ற தீர்ப்பு. 2013ல் உச்சநீதிமன்றத் தீர்ப்பு. ( இறுதித் தீர்ப்பு வெளியானது ஏப்ரல் 2013ல்தான். அதற்குள் அடுத்த தேர்தலே வந்துவிட்டது. ஆம், அக்டோபர் 2013ல் அடுத்த சட்டசபைக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது.)

கள்ள ஓட்டுப் போடப்பட்டால், அதுவும்ஒரு ஓட்டுவித்தியாசத்தில் வெற்றி,தோல்வி மாறும் என்ற இயல்புடைய வழக்கு ஒன்றில், தேசியக் கட்சி ஒன்றின் முதல்வர் வேட்பாளர் ஒருவர் தோற்ற வழக்கில் எவ்வளவுவிரைவாக!!தீர்ப்பு வரும் என்பதற்கு நம் கண்முன்னுள்ள உதாரணம் இது.  

பி.ஜே.பி.வேட்பாளரின் மனைவி கள்ள ஓட்டு போட்டது ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்ட பின்னரும், அவரின் ஓட்டைக் கழித்துவிட்டு மறு எண்ணிக்கை நடத்தவே உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. “நாத்துவாரா” தொகுதியில் நடைபெற்ற தேர்தலை ரத்துசெய்துவிடவில்லை..!!

காங்கிரஸ் வேட்பாளர் ஜோஷி ஒரு ஓட்டு வித்தியாசத்தில் தோற்று, முதல்வராகும் வாய்ப்பை இழந்தார் என்பதைப் பார்த்தோம்(பின்னர் அவர் மன்மோகன் சிங் ஆட்சியில் மத்திய மந்திரியானது வேறு கதை).  

இந்த சமயத்தில் ஒருவர், ஒரே ஒருவர், தேர்தல் நாளன்று  வாக்குச் சாவடிக்கு வந்திருந்தால் காங்கிரசின் ஜோஷி வெற்றி பெற்றிருப்பார்.

அவர் யார் தெரியுமா..? அவர் வேறு யாருமில்லை, வாக்களிக்க வராத ஜோஷியின் மனைவியே !! ??

செந்தில் ஆறுமுகம்,
பொதுச்செயலாளர்,
சட்ட பஞ்சாயத்து இயக்கம்

08-11-2018, 
கருத்துப்பகிர: sentharu@gmail.com, 87545-80274