Saturday, 16 January 2016

சிலை மனிதனும்.. பஸ் டிரைவரும்...

சிலை மனிதனும்.. பஸ் டிரைவரும்... 16-01-2016
பேருந்து எண்: 95. திருவான்மியூர் – தாம்பரம் பயணம். பேருந்து அதிவேகத்தில் பழைய மகாபலிபுரம் சாலையில்(OMR) விரைகிறது. பேருந்தின் வேகத்தைப் பார்த்து, உள்ளே இருந்தவர்களுக்கு விபத்து நடந்துவிடுமோ என்ற அச்சம். குடும்பத்துடன் நானும் ஒரு பயணியாக. ஓட்டுனருக்கு பின்னே நான்காவது வரிசை இருக்கையில் அமர்ந்தவண்ணம் ஓட்டுனரின் நடவடிக்கைகளை கவனித்துக்கொண்டே வருகிறேன்.

நடுத்தரவயதுமிக்க அந்த ஓட்டுனர், ஒரு இளைஞனுக்கு உரித்தான உற்சாகத்தோடு இருந்தார். ஓட்டுனரை பின்னால் இருந்தபடியே புகைப்படம் எடுத்தேன். அந்த ஓட்டுனரின் உற்சாகம்… அவர் பேருந்தை ஓட்டிய வேகம்… ஒவ்வொரு பேருந்து நிறுத்தத்திலும் ஸ்டைலாக வண்டி நிறுத்தியவிதம்.. கடந்த செல்லும் மற்றோரு பேருந்து ஓட்டுனரிடம் மகிழ்ச்சியைப் பரிமாறிக்கொண்டவிதம் அனைத்தும் ஒரு கற்பனைக் கதையை நினைவுபடுத்தியது…

“சிலையாக இருந்த மனிதன் ஒருவனுக்கு உயிர்பெற்று வாழும் வரம் கிடைத்தது. நீண்டகாலம் சிலையாக இருந்தவன், உயிர்பெற்றவுடன் முதன்முதலாக என்ன செய்வான்..? சுவையான உணவுதேடுவானா..? பிரிந்துசென்ற மனைவி-மக்களைத் தேடுவானா..? நீண்டகாலம் கால்கடுக்க சிலையாக நின்றவன் மரத்தடியில் அமர்ந்து ஓய்வெடுப்பானா..? என்பதை அறிந்துகொள்ளும் ஆர்வத்தில் இருந்தான் வரம் கொடுத்தவன்.

சிலையாக இருந்தவன், மனிதனாக மாறியவுடன் அருகில் இருந்த மரத்தில் ஏறினான். ஒரு காக்கையைப் பிடித்தான். பின்னர் அவசரமாக மரத்தின் கீழிருந்த புதருக்குள் சென்றான். என்ன நடக்கிறது என்பதைப் பார்க்கும் ஆர்வத்தோடு வரம்கொடுத்தவனும் பின்னலே சென்றான்.

சிலை மனிதன், அந்த காக்கையை தன் காலால் அழுத்திப்பிடித்துக்கொண்டு அதன்மீது முதலில் சிறுநீர் கழித்தான்.. பின்னர் மலம் கழித்தான்..
வரம் கொடுத்தவன் அதிர்ச்சியடைந்தான்.

பலவருடம் சிலையாக இருந்த நீங்கள் உணவு, உறவுகள், ஓய்வு இதை நோக்கிச் செல்வீர்கள் என்று நினைத்தேன்.. ஆனால், நீங்கள் இப்படி…. …? சுயநினைவோடுதான் செய்தீர்களா..?

நான் மீண்டும் மனிதனாகும் வரம்கொடுத்தமைக்கு நன்றி.. நீங்கள் சொன்னபடி உணவு, உறவுகளை நோக்கித்தான் போகப்போகிறேன்.. ஆனால், அதற்கு முன்னர் என் தலைமேல் இத்தனை ஆண்டுகள் தினந்தோறும் எச்சம் கழித்த காக்கை மீதுள்ள கோபத்தைத் தணித்துக்கொள்ளவே அவ்வாறு செய்தேன். இப்போது, கோபம் அடங்கிவிட்டது. என் வீட்டுக்குச் செல்கிறேன்.. நன்றி..

அடக்கப்பட்ட உணர்வுகள் எப்படி உணர்ச்சிபூர்வமாக வெளிப்படும் என்பதை உணர்த்தும் கற்பனைக் கதை இது.

IT கம்பெனிகள் நிறைந்த OMR சாலையில் தினந்தோறும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி பிரேக்கையும், கியரையும் மாறி மாறி அழுத்திக்கொண்டிருந்த ஓட்டுனருக்கு… நெரிசல் இல்லா சாலை- பயணிகள் யாரும் இறங்காத சில நிறுத்தங்கள் போன்றவற்றைக் கண்டவுடன் எல்லையில்லா மகிழ்ச்சி. அந்த சிலைமனிதனுக்கு காக்கை மீது எவ்வளவு கோபமோ.. அதுபோல், வருடக்கணக்கில் பிரேக் கட்டையை மட்டுமே அழுத்தி-அழுத்தி ஓட்டிய அந்த ஓட்டுனருக்கு ஆக்சிலேட்டரை ஒருநாளாவது ஆசைதீர மிதித்துவிடவேண்டுமென்ற உணர்வு மேலோங்கி இருந்தனை உணரமுடிந்தது.

நான் புகைப்படம் எடுத்ததைப் பார்த்த நடத்துனர் என்னருகில் வந்து “…சார், ரோடு காலியா இருக்குது, அதான் வேகமா ஓட்டுறார் வேறோன்னும் இல்லை. எப்பவுமே இப்படி ஓட்டமாட்டார் சார்” என்று நான் கேட்காத கேள்விக்கு விளக்கமாக விடையளித்தார். செம்பாக்கம் வந்துவிட்டது. புகார் ஏதேனும் கொடுத்துவிடுவேனோ என்ற அச்சத்தில் என்னருகிலேயே நின்றுகொண்டு ஏதேதோ பேசிக்கொண்டுவந்த நடத்துனரிடம், சிரித்துகொண்டே “..ஓட்டுனரை, பார்த்து கவனமா ஓட்டச்சொல்லுங்கனு” சொல்லிட்டு பேருந்திலிருந்து இறங்கிவிட்டேன்.

ஏதோ தெரியவில்லை, இன்று அந்த ஓட்டுனர் மீது புகார் கொடுக்கவேண்டும் என்ற எண்ணம் வரவில்லை !!. அவரின் ஒருநாள் உற்சாகம், வேகம் எந்த உயிரையும் பலிவாங்காமல் இருந்தால் சரி..

No comments:

Post a Comment