Monday, 18 April 2016

2016 மதுவிலக்கு ஆண்டு - கல்கி கட்டுரை

தமிழகத்தின் தலையாய 5 பிரச்னைகள் குறித்த கட்டுரைகளை இந்தவார “கல்கி” இதழில் ஞாநி தொகுத்துள்ளார். மின்சாரம்,மதுவிலக்கு,விவசாயம்,நீராதாரம்,லஞ்ச-ஊழல் ஆகிய 5 பிரச்னைகளில் மதுவிலக்கு குறித்த எனது கட்டுரையும் இடம்பெற்றுள்ளது.
2016 மதுவிலக்கு ஆண்டு...
==========================
“மது தனிமனிதனின் உழைக்கும் திறன், சிந்திக்கும் திறனைச் சீரழிக்கிறது. குடும்பத்தின் பொருளாதாரம், அமைதிக்கு வேட்டுவைக்கிறது.
சாலை விபத்துக்கள் மற்றும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்ற பல்வேறு சமூகப் பிரச்சனைகளுக்குத் தூண்டுகோலாக இருக்கிறது. இப்படி, தனிமனிதன் – குடும்பம் – சமூகம் என அனைத்துத் தரப்புக்கும் எமனாக இருப்பது “குடிநோய்”. அரசு மருத்துவ மனைகளுக்கு குடிநோயாளிகளை உருவாக்கி, அனுப்பி வைக்கும் இடங்கள் எது? அரசே நடத்தும் “ டாஸ்மாக் கடைகள்”.
டாஸ்மாக், மதுவிலக்கு என்ற விவாதம் வந்தவுடன் அவரவரின் கட்சி சார்பு நிலைக்குத்தக்கவாறு “கருணாநிதிதான் 1971 ல் மதுவிலக்கைத் தளர்த்தினார்.”என்றும் “ ஜெயலலிதாதான் 2003ல் டாஸ்மாக் கடைகளைத் திறந்தார் என்றும் வாதிடுவார்கள். உண்மை நிலை என்ன? புள்ளிவிவரங்களின் அடிப்படையில் ஆராய்வோம்.
2006 ல் மது விற்பனை மூலம் அரசுக்கு கிடைத்த வருவாய் ரூ 7,473 கோடி; 2011 ல் இது ரூ 14,965கோடி. இது கருணாநிதியின் 5 ஆண்டு ஆட்சியில் நடந்தது.
2011ல் ஜெயலலிதா பதவியேற்கும் போது மது வரிவாய் ரூ 14,965 கோடி;
2016 ல் இது ரூ 29,672 கோடி!! இரு ஆட்சியிலும் மது வருமனம் 100 % வளர்ச்சியடைந்துள்ளதைப் பார்க்கலாம்.
இந்த அடிப்படையில் பார்த்தால் இருவரும் ‘மதுக் கொள்கையில்” ஒத்த கருத்துள்ளவர்களே என்பது புரியும்.
இரண்டு கட்சியும் டாஸ்மாக் கடைகளைத் தாங்கிப் பிடிப்பதற்கு காரணம் மூன்று.
1.மதுபான உற்பத்தி ஆலைகள் மூலம் கட்சிக்குக் கிடைக்கும் வளர்ச்சி நிதி;
2.ஓட்டு வங்கி அரசியல் – நிர்வாகத் திறமையின்மை – ஊழல் – முறைகேடு போன்ற காரணங்களால் வறண்டுபோன அரசு கஜானாவுக்கு டாஸ்மாக் தரும் கணிசமான வருவாய் ;
3.கட்சி மாநாடுகள், போராட்டங்களுக்குப் பலகோடி செலவழிக்க வேண்டிய நிலையில் உள்ள கிளை, பகுதி, வட்டம், ஒன்றியம் மாவட்டச் செயலாளர்கள் “ செழிப்பாக” இருப்பதற்கு.
இந்த நேரடி காரணங்களுக்கு ஆதாரங்கள், புள்ளிவிவரங்கள் தரமுடியும். சிந்தனை மழுங்கிய சமூகத்தை உறுதி செய்துவிட்டால் ஓட்டுக்களை விலைக்கு வாங்குவது எளிது என்ற மறைமுகக் காரணத்திற்கு ஆதாரமில்லை. ஆனால் இது ஊரறிந்த உண்மை.
இப்படிப்பட்ட பின்புலத்தில், தமிழகத்தில் முன்னெப்பொதும் இல்லாத வகையில் கடந்த மூன்று ஆண்டுகளில் மதுவிலக்கு கோரி ஏராளமான போராட்டங்கள், டாஸ்மாக் முற்றுகைகள் நடைபெற்றுள்ளன. அனைத்து அரசியல் கட்சிகளும் மதுவிலக்கு ஆதரவு நிலைப்பாடு எடுத்துள்ளதற்கு இப்போராட்டங்களும் முக்கிய காரணம்.
2014 ம் ஆண்டு மார்ச் மாதத்தில் சட்டபஞ்சாயத்து இயக்கத்தின் ஒருங்கிணைப்பில் நடத்தப்பட்ட தமிழகம் தழுவிய மது ஒழிப்பு ஆர்வலர்கள் கூட்டத்தில், “2016 மது விலக்கு ஆண்டு” என்று தீர்மானம் நிறைவேற்றினோம், அறிவித்தோம். அப்போது பலர் சிரித்தார்கள். இப்போது அது சாத்தியத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.
நாங்கள் பேருந்துக்குள் ஏறி மதுவிலக்குப் பிரச்சாரத்தைத் தொடங்கும் முன்பே யாராவது ஒரு பெண் எங்கள் குழுவின் அருகே வந்து ‘எப்படியாவது இந்தக் கடைய சீக்கிரம் மூடச் சொல்லுங்கப்பா. வீட்ல சித்ரவதை தாங்கல’ என்ற கண்ணீர்க் கோரிக்கை வைப்பார். இப்படி ஒருமுறையல்ல, பல முறை நிகழ்ந்துள்ளன. இதிலிருந்து மதுவிலக்கு குறித்து மக்களின் எதிர்பார்ப்பைப் புரிந்துகொள்ளலாம்.
- செந்தில் ஆறுமுகம்,
மாநில பொதுசெயலாளர், சட்ட பஞ்சாயத்து இயக்கம்
sentharu@gmail.com


No comments:

Post a Comment