Thursday, 20 June 2019

ஒரே நாடு-ஒரே தேர்தல் அனைத்துக் கட்சிக் கூட்டம்

ஒரே நாடு-ஒரே தேர்தல் பற்றி...
செந்தில் ஆறுமுகம்

ஒரே நாடு- ஒரே தேர்தல்- அனைத்துக் கட்சிக் கூட்டம் -பார்வை:
அதிகாரப்பூர்வ எதிர்கட்சியே இல்லை என்ற அசுரபலத்தோடு வென்றிருக்கும் பா.ஜ.க. அனைத்துக்கட்சிகளைக் கூட்டி சில பொருள்களை விவாதிக்க எடுத்த முன்னெடுப்பு  வரவேற்புக்குரியது. ஆனால், 5 பிரச்னைகள் பற்றிப் பேச அழைக்கிறோம் என்று சொல்லிவிட்டு சர்ச்சைக்குரிய “ஒரே நாடு-ஒரே தேர்தல்” விவகாரத்தையும் அதில் இணைத்ததைத் தவிர்த்திருக்கவேண்டும். இப்போது பாருங்கள்... ஒரே தேர்தல் விவகாரத்தைத் தவிர்த்து காந்தியின் 150 வது பிறந்ததினம், சுதந்திர தினத்தின் 75ம் ஆண்டு,வடகிழக்கு பிராந்தியங்களின் வளர்ச்சி உள்ளிட்ட பிற 4 விஷயங்கள் பற்றி முடிவுகள்,விவாதங்கள் பொதுமக்களிடம் சென்று சேரவே இல்லை. ஒரே தேர்தல் என்பது குறித்து விவாதிப்பதற்குத்தான் இக்கூட்டம் கூட்டப்பட்டது என்ற பிம்பம்தான் உருவாகி நிற்கிறது. விவசாயம், வேலைவாய்ப்பு, கல்வி,தண்ணீர் பிரச்னை,இயற்கைவளங்களைப் பாதுகாத்தல் போன்ற பிரச்னைகளை முன்னிறுத்தி இருந்தால் இக்கூட்டம் ஆரோக்யமான போக்கை நோக்கிச் சென்றிருக்கும். பிரதான எதிர்க்கட்சிகள் கூட்டத்தை புறக்கணித்திருக்க முடியாது.

அதுவும், தமிழகத்தின் பிரதிநிதியை(சட்ட அமைச்சர் சி.வி.சண்முகத்தை) கூட்டத்திற்குள் அனுமதிக்காத போக்கு தமிழகத்தின் மீதான பா.ஜ.க.வின் அலட்சிய/ஆதிக்கப் பார்வையை வெளிச்சம் போட்டுக் காட்டிவிட்டது.  பா.ஜ.க. நம் மாநிலத்தை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை என்பதுதான் இக்கூட்டத்தின் மூலம் தமிழகத்தில் அதிகம் பரவிய கருத்தாக நிற்கிறது..!! ஆரம்பமே இப்படி இருப்பது சரியில்லை..!! அனைத்துக்கட்சிக் கூட்டத்தை கூட்டவேண்டும் என்ற நோக்கம் நல்லதே..ஆனால், விவாதத்திற்கு எடுத்துக்கொண்ட பொருளான “ஒரே நாடு-ஒரே தேர்தல்” விவகாரம் கூட்டத்தின் நோக்கத்தை சிதைத்துவிட்டது. Meeting Over. Purpose not fulfilled. OPERATION SUCCESS..PATIENT DEAD..!!

எதிர்பார்ப்பு:
கூட்டத்தைப் புறக்கணித்த காங்கிரஸ்-திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளிடம்...!!
”ஒரே-நாடு, ஒரே தேர்தல்” உள்ளிட்ட பிற 4 விவகாரங்களில் என்னதான் மாற்றுக்கருத்து இருந்தாலும் அதை டெல்லியில் நடைபெற்ற கூட்டத்தில் போய் நீங்கள் முன்வைத்திருத்தால், உங்களின் கருத்து இன்னும் விரிவாய் தேசிய அளவில் விவாதத்திற்கு வந்திருக்கும். “ராகுலும்-மோடியும்” “மோடியும்-ஸ்டாலினும்” காரசார விவாதம் என்று செய்திகள் வெளியாகியிருக்கும்.. என்னதான் விவாதம் நடந்தது என்று பொதுமக்களும் கவனித்திருப்பார்கள். உங்கள் கட்சியின் நிலைப்பாடு,அணுகுமுறை எப்படி இருக்கவேண்டும் என்று முடிவெடுப்பதற்கு உங்களுக்கு முழு உரிமை உண்டு.. கூட்டத்தில் கலந்துகொண்டிருக்கவேண்டும் என்பதே தமிழக,இந்திய குடிமகனாக எனக்குள்ள சிறு எதிர்பார்ப்பு..!! 

இப்ப  ஒரு குட்டிக்கதை..!!
“...ஒரு பெரிய நதியின் மீதுள்ள பாலத்தில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. பாலத்தை அகலப்படுத்தலாம், ஒருவழிப்பாதையாக்கலாம், கூடுதலாக ஒரு பாலம் கட்டலாம் என்று பல யோசனைகள் விவாதிக்கப்பட்டன. ஆனால் ஒருவர் சொன்னாராம்... ஏன் இவ்வளவு சிரமப்படணும்..இந்த நதிதானே பிரச்னை; நதியின் போக்கை மாற்றி வேறுவழியில் விட்டுவிட்டால் பிரச்னையே இல்லையே. !!”   ”ஒரே நாடு-ஒரே தேர்தல்” குறித்து யோகேந்திரா யாதவ் சொன்ன கதை இது..!! 

-செந்தில் ஆறுமுகம்
20-06-2019
20.06.2019

No comments:

Post a Comment